வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப சம்பள உயர்வு இன்னும் செய்யப்படவில்லை.. இந்த வரவு செலவுத் திட்டத்திலும் அது நிறைவேறவில்லை..- லால் காந்த

தற்போதைய உயர்ந்த வாழ்க்கைச் செலவுக்குப் பொருத்தமான வகையில் முழுமையான சம்பள உயர்வு ஒன்றை தற்போதைய அரசாங்கம் இதுவரை செய்யவில்லை என்றும், சமர்ப்பிக்கப்பட்ட புதிய வரவு செலவுத் திட்ட அறிக்கையின் ஊடாகவும் அது நிறைவேறவில்லை என்றும் விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
வாழ்க்கைச் செலவுக்கு ஈடுகொடுக்கக்கூடிய உண்மையான சம்பள உயர்வை வழங்குவது தொடர்பில் எதிர்கால வரவு செலவுத் திட்டமொன்றில் கவனம் செலுத்த அரசாங்கத்திற்கு நேரிடும் எனக் குறிப்பிட்டார்.
வரவு செலவுத் திட்ட அறிக்கை என்பது நிலவும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே நேரத்தில் இறுதித் தீர்வுகளை வழங்கும் ஊடகம் அல்ல எனச் சுட்டிக்காட்டிய அவர், அமைச்சு மட்டத்தில் முன்னெடுக்கப்படும் கலந்துரையாடல்கள் மற்றும் தேசிய சம்பள ஆணைக்குழு ஊடாகவும் வரவு செலவுத் திட்டத்திற்கு அப்பால் சம்பள மற்றும் தொழிற்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வாய்ப்பு காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.
நீண்ட காலம் தொழிற்சங்க இயக்கத்தில் ஈடுபட்ட தலைவரொருவர் என்ற வகையில் தனக்கு அது தொடர்பில் நல்ல புரிதல் உள்ளதாக நினைவுகூர்ந்த லால் காந்த, கோரிக்கைகளை முன்வைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், போராட்டங்களில் ஈடுபடுவதற்கும் தொழிற்சங்கங்களுக்கு முழு உரிமை உள்ளதாகவும், அது தொடர்பில் அரசாங்கத்திற்கு எவ்வித மனக்கசப்பும் இல்லை என்றும் கூறினார்.
அரசாங்கம் எவ்வளவுதான் வழங்கினாலும் தொழிற்சங்கங்கள் கோரிக்கைகளை முன்வைப்பது சாதாரண நிலைமை என்றும், அரசாங்கம் முகங்கொடுத்துள்ள உண்மையான பொருளாதார நிலைமை தொடர்பில் அரச ஊழியர்களுக்கு நல்ல புரிதல் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



