நாட்டில் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு
இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலை காரணமாக இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும்.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் 100 mm வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும்.
ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடக்கு , கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களில்
****************************
சிலாபம் தொடக்கம் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் புத்தளம் தொடக்கம் கொழும்பு, மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் வடமேற்கு அல்லது மேற்குத் திசையில் இருந்தும் நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மாறுபட்ட திசைகளில் இருந்தும் காற்று வீசும்.
புத்தளம் தொடக்கம் கொழும்பு , மாத்தறை ஊடாக ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.