News

எஸ்.பி.திஸாநாயக்கவின் மகன், சுசில் பிரேமஜயந்தின் மகள் உள்ளிட்ட ஏராளமான அரசியல்வாதிகளின் உறவினர்கள் வெளிநாட்டு தூதரகங்களில் பல்வேறு பதவிகளில் இருப்பது அம்பலம்.

இலங்கை வெளிநாட்டு சேவை அதிகாரிகள் அல்லாத அரசியல் தொடர்புகளின் அடிப்படையில் அரசியல்வாதிகளின் உறவினர்கள் பலர் வெளிநாட்டு தூதரகங்களில் பல்வேறு பதவி நிலைகளில் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.



அந்த அடிப்படையில் ஐக்கிய அமெரிக்கா வொஷிங்டனில் இலங்கைக்கான தூதுவராக முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க செயற்படுவதோடு தூதரகத்தின் மூன்றாவது அதிகாரி தாரக திஸாநாயக்க ஆவார்.
தாரக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவின் மகனாவார். அங்கு எழுத்தாளராக கடமையாற்றுபவர் முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தின் மகள் இந்திவரி குலரத்ன.



இதற்கு முன்னர் மேற்குறிப்பிட்ட தூதரகத்தில் முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவின் மகன் விபுல கடமையாற்றியுள்ளார்.



அதே தூதரகத்தின் ஊடக அதிகாரி அசோக ஜயதுங்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செய்தி தொடர்பாளராக கடமையாற்றியவர். 



அமெரிக்காவின் லொஸ் ஏன்ஜல்ஸ் கொன்சல் ஜெனரலாக கடமையாற்றுபவர் டாக்டர் லலித் சந்திரதாஸ.
இவர் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் மைத்துனர் ஆவார்.



அவுஸ்திரேலியாவின் கான்பராவின் உயர்ஸ்தானிகரான சித்ராங்கணி வாகீஸ்வர ஜனாதிபதி அலுவலகத்தில் சேவையாற்றி ஓய்வு பெற்றவராவார்.



அந்த அலுவலகத்தில் மூன்றாவது அதிகாரியாகப் பணிபுரிபவர் டி.சி.பெர்னாண்டோபுள்ளே முன்னாள் அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மனைவியாவார். மெல்பெர்ன் கொன்சல் ஜெனரல் சந்தித் சமரசிங்க. இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.



ஜப்பான் டோக்கியோவில் இலங்கைக்கான தூதுவர் ரொட்னி பெரேரா. இவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான ரொனால்ட் பெரேராவின் சகோதரர் ஆவார். 2006ஆம் ஆண்டு முதல் இதே அலுவலகத்தில் எழுத்தளராக கடமையாற்றி வரும் இந்து குணரத்ன, முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் உறவுக்கார மகளாவார்.



லண்டனில் உள்ள இங்கிலாந்து உயர்ஸ்தானிகர் ரோஹித போகல்லாகம முன்னாள் அரசியல்வாதி ஆவார். இங்கு மூன்றாவது அதிகாரியான சேனிய புஞ்சி நிலமே முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமேயின் மகன்.



இதற்கு முன்னர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பியல் சாந்தவின் மகன் கசுந்த சில்வா மூன்றாவது அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.



முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனான சஹஸ்ர பண்டார, பாரிஸில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் மூன்றாவது அதிகாரியாவார்.



அதற்கு முன்னர் அந்த பதவியில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் இளைய சகோதரரான அமில திஸாநாயக்க பணியாற்றியிருந்தார்.



அத்தோடு சீஷெல்ஸ் விக்டோரியாவின் உயர்ஸ்தானிகராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனர் ஸ்ரீமால் விக்கிரமசிங்க ஆவார். இவர் ஷிரந்தி ராஜபக்சவின் சகோதரர் ஆவார்.பாலஸ்தீனத்தில் இலங்கைக்கான பிரதிநிதியாக முன்னாள் பிரதி அமைச்சர் நாவலகே பென்னட் குரே பதவி வகிக்கிறார்.



மேற்குறிப்பிட்ட இந்த பட்டியலிலுள்ள நபர்கள் அல்லாத இன்னும் பலர் இவ்வாறு வெளிநாட்டு தூதரகங்களில் பல்வேறு பதவி நிலைகளில் பணிபுரிகின்றமை அண்மையில் வெளிவந்துள்ளன.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button