நாட்டில் இடம்பெற்ற பெரிய அளவிலான குற்றங்கள், மோசடிகள் மற்றும் தொடர்பான பல்வேறு பொலிஸ் விசாரணைகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்ய கலந்துரையாடல்
பொது பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் ரவி செனவிரத்ன தலைமையில் பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (3) விசேட கூட்டம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் இடம்பெற்ற பெரிய அளவிலான குற்றங்கள், மோசடிகள் மற்றும் பிற விசேட குற்றங்கள் தொடர்பான பல்வேறு பொலிஸ் விசாரணைகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதே இந்த சந்திப்பின் நோக்கமாகும்.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) சிரேஷ்ட பிரதிநிதிகள் குழுவும் இந்த கலந்துரையாடலில் இணைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கக்கூடிய வழக்குகள் மற்றும் இடைநிறுத்தப்பட்ட விசாரணைகளில் அரசியல் காரணிகள் தாக்கத்தை ஏற்படுத்தியதா என்பது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், தேவையில்லாமல் தாமதப்படுத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் வேறு ஏதேனும் புதிய விசாரணைகள் தொடங்கப்பட வேண்டுமா என்பது குறித்தும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
விசாரணைகளில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டிருந்தால், அவை என்ன என்பது குறித்தும், தாமதத்திற்கான காரணங்கள் குறித்தும் கலந்தாலோசித்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பல முக்கிய விசாரணைகள் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக கலந்துரையாடல் தொடர்பான விடயங்கள் தொடர்பான அறிக்கை தயாரிக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.