உலகத்தர வீரர்கள் பாபர் அசாம், முகம்மது ரிஸ்வான், ஷாஹீன் அப்ரிடி உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்களுக்கு மாதக்கணக்கில் சம்பளம் வழங்கப்படவில்லை

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி, கடந்த நான்கு மாதங்களாக வீரர், வீராங்கனைகளுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர்களுக்கு 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் ஊடகங்களின் அறிக்கைகளின்படி, தேசிய அணி வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாஹீன் அப்ரிடி போன்ற நட்சத்திரங்கள் கடந்த நான்கு மாத சம்பளத்தை இன்னும் பெறவில்லை எனத் தெரிவித்துள்ளன. அதுபோல், பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிக்கும் நான்கு மாத சம்பளம் பாக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2023 ஜூலை 1 முதல் ஜூன் 30, 2026 வரை மொத்தம் 25 மூத்த கிரிக்கெட் வீரர்களுக்கு மூன்றாண்டு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. இருப்பினும், அணியின் மோசமான ஆட்டம் காரணமாக ஒப்பந்தங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, உலகக் கோப்பைக்கு முன்னதாக, வீரர்கள் ஒரு சாதகமான ஒப்பந்தத்தைப் பெற வாரியத்திற்கு அழுத்தம் கொடுத்தனர்.
ஆனால் தற்போதைய நிலைமை வியத்தகு முறையில் மாறிவிட்டது. இதன்காரணமாகவே, ஜூலை முதல் அக்டோபர் வரை நான்கு மாதங்களாக அவர்களுக்கு மாதச் சம்பளம் கிடைக்கவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல், ஆகஸ்ட் 21, 2023 முதல் 23 மாத ஒப்பந்தத்தில் இருக்கும் மகளிர் அணி வீராங்கனைகளுக்கும் கடந்த நான்கு மாதங்களாக இன்னும் ஊதியம் வழங்கப்படவில்லை. அவர்களது ஒப்பந்தம் மறுஆய்வு செய்யப்படும் எனவும், தற்போது அது செயல்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


