News

ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று காலை முதல் விசாரித்த உயர்நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது.



19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் உரிய வகையில் நிறைவேற்றப்படாததால் அதனை பொதுமக்கள் கருத்து கணிப்புக்குட்படுத்தி நிறைவேற்றும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பு வழங்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது.



சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுன இந்த மனுவை தாக்கல் செய்தார்.



மனுவின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம், சட்ட மாஅதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டனர்.



19 ஆவது திருத்தத்தின் ஊடாக அரசியலமைப்பின் 70 ஆவது சரத்து திருத்தப்பட்டு தெரிவுசெய்யப்படும் பாராளுமன்றத்தை ஒரு வருடத்தின் பின்னர் கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி இழந்துள்ளதாக மனுதாரர் மனுவில் குறிப்பிட்டார்.



19 ஆவது திருத்தம் பொதுமக்கள் கருத்து கணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் தீர்ப்பு வழங்கிய போதிலும் இதுவரை மக்கள் கருத்துக்கணிப்பின் மூலம் அது அங்கீகரிக்கப்படவில்லை என மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.



பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button