News

நடைமுறை சாத்தியமற்ற அறிவிப்புக்களை அறிவித்து மக்களை மீண்டும் ஏமாற்றும் ஹக்கீம் அதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை

மாளிகைக்காடு செய்தியாளர்

என்னால் எடுக்கக்கூடிய உச்சக்கட்ட முயற்சியை நான் எடுத்த நிலையிலும் ஏனைய வேட்பாளர்கள் விட்டுக்கொடுப்பு செய்யாத காரணத்தினாலும் இறுதி நேரத்தில் சகோதரர் ஹரிஸ் அவர்களின் பெயர்  வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கப்படுவதில் தடங்கள் ஏற்பட்டது என்பது கவலைக்குரியது. அவ்வாறாக இருந்த போதிலும் கூட கட்சியின் தேசியப் பட்டியலில் அவர் பெயர் முதலாவதாக உள்வாங்கப்பட வேண்டும் என்ற பிரேரணையும் முன்வைக்கப்பட்டது. அதையும் நாங்கள் சாதகமாக பரிசீலித்திருக்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தெரிவித்திருப்பது ஹரீஸ் அவர்களின் மக்கள் செல்வாக்குக்கு அஞ்சியே தவிர வேறு காரணங்கள் இல்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரமுகரும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஏ.சி.ஏ.சத்தார் தெரிவித்தார்.

சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

திகாமடுல்ல மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரிஷ் அவர்கள் உள்வாங்கப்பட வில்லை என்ற அறிவிப்பு வெளியானவுடன் கிழக்கு மாகாணத்தில் அவருக்கு எழுந்துள்ள அனுதாப அலையை கட்டுப்படுத்தவும், மாவட்டம் முழுவதிலுமுள்ள அவரின் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளவும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு எதிராக எழுந்துள்ள அதிருப்தியை சரிப்படுத்தவும் பாமர மக்களை இன்னும் இன்னும் ஏமாற்றலாம் என நினைத்து இப்படியான அறிவிப்புக்களை வெளியிடுகிறார்

தேர்தல் சட்டத்தை மக்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளார்கள். அதனடிப்படையில் தேசிய பட்டியலில் உள்ளடக்கப்பட்ட வேட்பாளர்களின் பெயர்பட்டியலானது வேட்புமனு இறுதித்தினத்தன்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்த பட்டியலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்கள் எங்கும் ஒப்பமிடவில்லை என்பதாக அறிகிறோம். இந்த நிலையில் ஹரீஸ் அவர்களை எப்படி தேசிய பட்டியலில் நீங்கள் உள்ளடக்க முடியும். இது தேர்தல் சட்டத்தில் இல்லாத ஒரு விடயம். தேர்தல்கள் ஆணைக்குழு எவ்வாறு வேட்புமனுவில் பெயர்களை மாற்ற அனுமதிக்காதோ அதுபோன்று இனி அந்த தேசிய பட்டியலில் கூட மாற்றத்தை செய்ய அனுமதிக்காது. இவ்வாறான நிலையில் மக்களுக்கு ஹரீஸ் அவர்களை எம்.பியாக்க போவதாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றுகிறீர்கள்.

ஏற்கனவே ஒட்டமாவடிக்கும் தங்களின் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டால் அங்கும் தேசிய பட்டியல் தருவதாக வாக்குறுதி வழங்கி அதுபோன்று பல ஊர்களுக்கும் ஹக்கீம் அவர்களினால் தேசிய பட்டியல் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ள சூழ்நிலையில் கல்முனை தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலில் கட்சி செயலாளர் நிஸாம் காரியப்பரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அவருக்கு நிச்சயம் பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்படும் என்பதை அறிகிறோம். இப்போது முன்னாள் எம்.பி ஹரீஸுக்கும் மு.கா தேசிய பட்டியலில் எம்.பி வழங்க போவதாக கூறப்படுகிறது. மு.கா என்பது பரந்துபட்ட கட்சி கல்முனைக்கு இரண்டு தேசிய பட்டியல் என்ற விடயத்தை ஏனைய ஊர்கள் ஏற்றுக்கொள்ளுமா? அல்லது கட்சிபிரமுகர்கள் தான் ஏற்றுக்கொள்வார்களா? இதில் எங்காவது சாத்தியப்பாடுகளோ அல்லது லொஜிகோ இருக்கிறதா?  இப்படியான கதையை சூழ்நிலைக்கு ஏற்ப மு.கா தலைவர் ஹக்கீம் அவிழ்த்து விடுவது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை.

மு.கா தலைவர் ஹக்கீம் அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் ஒருவர் என்றவகையில் இவ்வாறான விடயங்கள் இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்டவை என்பதை உணர்ந்து அல்லாஹ்வை அஞ்சி கொள்ள வேண்டும். பல்வேறு விடயங்களில் உலமாக்கள் முன்னிலையிலும், உலமாக்களிடமும் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு ஏமாற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இஸ்லாமியர்கள் உறுதியாக நம்பும் மறுமையை பயந்து இப்படியான வேலைகளிலிருந்து தவிர்ந்து கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.

UMAR LEBBE NOORUL HUTHA UMAR

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button