News

பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் ;ஹக்கீம்

பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட ஐ.ம. ச. வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் கண்டியில் தெரிவித்துள்ளார்.

இது தனது தனிப்பட்ட கருத்தாக இருந்தாலும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையும் இது தொடர்பில் தமது இணக்கத்தை வெளிப்படுத்தும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் திங்கட்கிழமை (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது:

ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏழு மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன்

இணைந்து போட்டியிடுகிறது. கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தனித்து போட்டியிடுகின்றோம். அதன் மூலம் மேலும் 04 பாராளுமன்ற ஆசனங்களைப் பெறுவதே எமது நோக்கமாகும்.

பாராளுமன்ற தேர்தல். ஜனாதிபதி தேர்தலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. விகிதாசார வாக்கு முறை நடைமுறைப் படுத்தப்பட்ட பின்னர் நான்கு ஜனாதிபதித் தேர்தல்களில் மாத்திரமே ஜனாதிபதியாக வெற்றி பெற்ற கட்சி பொதுத் தேர்தலில் குறைந்தபட்ச பெரும்பான்மையைப் பெற முடியாமல் போனது.

தேசிய மக்கள் சக்தி இம்முறையும் குறைந்தபட்ச பெரும்பான்மையைப் பெறாது என்பதை திண்ணமாக கூறலாம்

தேசிய மக்கள் சக்தியில் வேட்பாளருக்கான பட்டியலைப் பார்க்கும்போது, மக்களுக்குத் தெரிந்த பிரபல அரசியல் பிரமுகர்கள் குறைவு. மேலும் பாராளுமன்றம் என்பது அதுவொரு விளையாட்டுக் கூடம் அல்ல. திறமையும் அனுபவமும் உள்ளவர்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.

தேசிய மக்கள் சத்தியின் வேட்பாளர் பட்டியலில் பாரிய குறைபாடுகள் உள்ளன. பொதுத் தேர்தலில் யார் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தாலும் நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

நாட்டின் ஜனநாயகம் வலுவாக இருக்க வலுவான எதிர்க்கட்சி அவசியம். மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆட்சியாளர்கள் நாட்டை திவாலாக்கியதை நாம் அனைவரும் அறிவோம். இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை கவனமாக பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

கண்டியில் இருந்து ஐக்கிய மக்கள் கூடடணிக்கு 07 பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக் கொடுப்பதே எமது இலக்காகும். கடந்த குறுகிய காலத்தில் அரசாங்கம் வாக்குறுதிகளை வழங்கிய போதிலும் அதனை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதுமட்டுமன்றி, பொதுத் தேர்தலிலும் வாக்குறுதிகள்அள்ளி வீசப்படுகின்றன, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக புதிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் கூறுகிறது. கத்தோலிக்க திருச்சபை இவ்விஷயத்தில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டது. இது குறித்து நான் பாராளுமன்றத்தில் பேசினேன்.

மேலும் இது குறித்து தற்போதைய ஜனாதிபதியும் நினைவுபடுத்தியுள்ளார் இது தொடர்பில் வெளியாகியுள்ள உண்மைகளின் அடிப்படையில் சட்டமா அதிபருக்கோ அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கோ விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எந்தத் தடையும் இல்லை.

Recent Articles

Back to top button