News

அரசாங்கம் ஆட்சியை கைவிட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டால், நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியுமான அணியொன்று கட்டாயம் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் என ரணில் தரப்பு தெரிவிப்பு

எம்.ஆர்.எம்.வசீம்) 

அரசாங்கம் ஆட்சியை கைவிட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டால், நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியுமான அணியொன்று பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும்.  

அவ்வாறான அனுபவமுள்ளவர்கள் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்களாக களமிறக்கி இருக்கிறது என புதிய ஜனநாயக முன்னணியின் கம்பஹா மாவட்ட வேட்பாளரும் ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவருமான ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார். 

கம்பஹா பிரதேசத்தில் நேற்று  திங்கட்கிழமை (28) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 

நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாக இருந்தது. எமது நாட்டின் பொருளாதாரத்தை ரணில் விக்ரமசிங்கவுக்கே கட்டியெழுப்ப முடியும்.  

நாடு வங்குராேத்தடைந்த போது, நாட்டை பொறுப்பேற்க அவர் மாத்திரமே முன்வந்தார். நாங்கள் அனைவரும் தற்போது நிம்மதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திக்கொடுத்தது ரணில் விக்ரமசிங்கவாகும். 

என்றாலும் ஜனாதிபதி தேர்தலில் துரதிஷ்டவசமாக நாட்டு மக்கள் வேறு ஒரு தீர்மானத்தை எடுத்தார்கள். தற்போது மக்கள் நியமித்திருக்கும் ஜனாதிபதியின் காலை வாறிவி நாங்கள் நினைப்பதில்லை.

இருந்தபோதும் ஜனாதிபதியின் சில தீர்மானங்கள் குறித்து எங்களுக்கு திருப்தியடைய முடியாது. அவருக்கு இருக்கும்  அனுபவ குறைவே இதற்கு காரணமாகும். நாட்டின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்பது என்பது இலகுவான பொறுப்பல்ல. 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பொருளாதாரம் தொடர்பில் இருக்கும் திறமை காரணமாக  நாட்டின் பொருளாதாரத்தை ஓரளவு ஸ்திர நிலைக்கு கொண்டுவர அவருக்கு முடியுமாகியது.  

ஆனால் அநுரகுமார திஸாநாயக்க அன்று சொன்ன விடயங்களுக்கும் தற்போது தெரிவிக்கும் விடயங்களை பார்க்கும்போது ஒன்றுக்கொன்று முரண்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது. அதனால் இந்த தேர்தலிலாவது நாட்டுக்கு சரியான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு நாங்கள் சிந்திக்க வேண்டும். 

அனுபவமில்லாத பிரிவினர் அரசாங்கத்துக்கு நியமிக்கப்பட்டால் அதனால் நாட்டுக்கு நல்லது நடக்கும் என நாங்கள் நினைப்பதில்லை. இன்று திசைகாட்டியில் இருப்பவர்கள் யார் என்றுகூட மக்களுக்கு தெரியாது.  

என்றாலும் எமது அணியில் திறமையான அனுபவமுள்ளவர்கள் இருக்கிறார்கள். தற்பாேதைய ஆட்சியாளர்களுக்கும் தங்களின் பொறுப்பை கைவிட்டு செல்ல  நேரிட்டால், மீண்டும் நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு அனுபமுள்ள அணியொன்று பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button