காத்தான்குடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஹிஸ்புல்லா அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சுபைர் வேண்டுகோள்
காத்தான்குடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஹிஸ்புல்லா அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும்: ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சுபைர்
நாட்டிலே ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தினையடுத்து மக்கள் விரும்புகின்ற இளம் அரசியல் தலைவர்களுக்கு வழிவிட்டு ஹிஸ்புல்லாவும் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
ஏறாவூர் மிச்நகரில் சனிக்கிழமை (02) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது நாட்டிலே 25, 30 வருடங்கள் அரசியல் செய்து பெரும்பணிகளை செய்த சிரேஷ்ட அரசியல் தலைவர்களில் பெரும்பாலானோர் இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் கௌரவமாக ஒதுங்கியுள்ளனர். நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே அவர்கள் இதனைச் செய்துள்ளனர்.
அந்த அப்படையில் ஏறாவூரின் சிரேஷ்ட அரசியல் தலைவர்களும் ஏறாவூரின் இளம் அரசியல் தலைவர்களுக்கு வழிவிட்டு இந்தத் தேர்தலில் ஒதுங்கியிருக்கும் நிலையில் இவ்வாறானதொரு முன்மாதிரியான செயற்பாட்டினை ஹிஸ்புல்லாவும் காத்தான்குடியில் கடைப்பிடித்திருக்க வேணடும். புதிய மாற்றத்தினை காத்தான்குடி மக்களும் எதிர்பார்க்கின்றனர். இதனை ஹிஸ்புல்லாவும் புரிந்துகொள்ள வேண்டும்.
1989ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசியலுக்குள் நுழைந்த ஹிஸ்புல்லா சுமார் 35 வருடங்களுக்கு மேல் அரசியல் செய்து பல்வேறு பதவிகளை வகித்தவர். அவர் சுயநல அரசியலை கைவிட்டு காத்தான்குடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கௌரவமாக அரசியிலில் இருந்து ஒதுங்குவதே சாலச்சிறந்தது. அதனைவிடுத்து பொய்களைக்கூறி அல்லது பணங்களை கொடுத்து மக்களின் எதிர்பார்ப்புக்களையும் உணர்வுகளைவுகளையும் சிதைப்பதற்கு ஹிஸ்புல்லா முற்பட்டால் மக்கள் இந்தத்தேர்தலில் அவருக்கு பாடம் புகட்டுவர் என்றார்.