நியூசிலாந்தின் உலக பிறிமியர் தொடரிற்கான நடுவராக மூதூர் மகன் சிஹான் சுஹூட் தெரிவு
ஹஸ்பர் ஏ.எச்_
நியூசிலாந்தின் அவுக்லாந்த் கிரிகட் சபையின் ஆடவர் மற்றும் மகளீருக்கான 2025 இற்கான உலக பிறிமியர் தொடருக்காக கிரிக்கட் நடுவராக இலங்கை கிரிக்கட் சபையின் சரா பெனல் நடுவரும், இங்கிலாந்து கிரிக்கட்டின் தரம் இரண்டின் நடுவரும் மற்றும் இங்கிலாந்தின் சஸ்ஸெக்ஸ் பிராந்திய முதல்தர நடுவருமான திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த மூதூர் சிஹான் சுஹூட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த தொடரானது 2024 டிசம்பர் முதல் 2025 ஏப்ரல் வரையான காலப்பகுதியில் நியூசிலாந்தின் அவுக்லாந்த் மற்றும் வெலிங்க்டன் நகரங்களிலே நடைபெறவுள்ளது.
குறித்த தொடருக்கான இரண்டாம் மற்றும் நொக் அவுட் சுற்றுக்களுக்காவே நடுவர் சிஹான் சுஹூட் அவுக்லாந்த் கிரிக்கட் சபையினால் அழைக்கப்பட்டுள்ளார்.
குறித்த தொடரில் பல அனுபவம் வாய்ந்த சர்வதேச நடுவர்கள் பங்குபற்றுவதும் சிறப்பம்சமாகும்.
இலங்கை கிரிக்கட் சபையிலிருந்து நியூசிலாந்தின் பிறீமியர் தொடரில் பங்குபெறும் முதல் இலங்கை நடுவர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவர் 2022 இல் இங்கிலாந்தின் மன்செஸ்டர் கிரிக்கட்டின் முதல் தர போட்டிகளுக்கு இலங்கை கிரிக்கட் சபையிலிருந்து தெரிவான முதலாவது நடுவருமாவார், மேலும் இவர் தற்போது இங்கிலாந்தின் சஸ்ஸெக்ஸ் பிராந்திய முதல் தரம் மற்றும் பிறீமியர் தொடரின் நடுவராக கடமையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
மூதூர் மத்திய கல்லூரி, இ.கி.ச. திருகோணமலை இந்துக் கல்லூரி மற்றும் மாவனல்ல சாஹிரா கல்லூரியின் பழைய மாணவரான சிஹான் சுஹூட் திருமலை கிரிக்கட் சங்கம் மற்றும் நடுவர்கள் சங்கத்தின் சிரேஸ்ட நடுவருமாவார்.
2016 தொடக்கம் தேசிய ரீதியாக இலங்கையில் பல மாவட்டங்களிலும் சிறப்பாக நடுவராக பணியாற்றிய சிஹான் சுஹூட் 2022 இல் இருந்து இற்றை வரை கிரிக்கட்டின் முதல்தர நாடுகளில் பிராந்திய மற்றும் முதல்தர போட்டிகளில் நடுவராக பணியாற்றிவருவதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.