பாடசாலை சிறுவனை துஸ்பிரயோகம் செய்த சந்தேக நபரான ஆசிரியருக்கு விளக்கமறியல் – சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் சம்பவம்
பாறுக் ஷிஹான்
9 வயது பாடசாலை சிறுவனை பல முறை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேக நபரான 38 வயது ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரம் 4 இல் கல்வி பயிலும் பாடசாலை சிறுவனின் பெற்றோரினால் 13.11.2024 அன்று மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய சந்தேக நபரான 38 வயது ஆரம்ப கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.இச் சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதி ஒன்றில் உள்ள பாடசாலையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த பாடசாலை மாணவனை அப்பாடசாலையின் மலசல கூடத்திற்கு அழைத்து சென்று பலமுறை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக 38 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரான ஆசிரியர் மீது முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் வழிகாட்டுதலில் பொலிஸ் குழுவினர் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு சந்தேக நபரான ஆசிரியரை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் கடந்த புதன்கிழமை(13) முன்னிலைப்படுத்திய வேளை எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆந் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்தறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 9 வயது பாடசாலை சிறுவன் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.