News

ரவூஃப் ஹகீம்: அமானிதங்களை நிறைவேற்ற மற்றுமொரு சந்தர்ப்பம் தரப்பட்டிருக்கிறது 🌳

எனது மைத்துனராக இருந்த போதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹகீமை அரசியல் ரீதியாக அதிகம் விமர்சித்தவன் நானாகத் தான் இருக்க முடியும்.

தேசத்தை காவு கொண்டிருந்த வங்குரோத்து அரசியல் கலாசாரத்தில் இரண்டறக் கலந்து போராட்ட அரசியல் பண்புகளை இழந்து போயிருந்த சமூக அரசியலிலும் ஏக காலத்தில் மாற்றம் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தேசிய மக்கள் சக்தியிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் என்னாலான ஆதரவை நான் வழங்கி வந்த போதும்..

முஸ்லிம் காங்கிரஸின் தலைமை இந்த தேர்தலில் தோற்று விடக்கூடாது என்பதே எனது நிலைப்பாடாக இருந்தது (அதுவே அல்லாஹ்வின் நாட்டமாகவும் இருந்திருக்கிறது) அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

முதலாவதாக எனது பார்வையில் கடந்த மூன்று சாப்தகால அரசியலில் அவர் மற்றும் அவரது தலைமையில் ஒன்றிணைந்தும் பிளவுண்டும் அரசியல் செய்தவர்கள் விட்ட அரசியல் தவறுகளுக்கு இந்த ஆட்சிக் கட்டமைப்பின் கீழ் முன்னுரிமைப் பட்டியலிட்டு பிராயச்சித்தம் தேடுவதற்கு ஒரு சந்தர்ப்பம் அவருக்கு தரப்பட வேண்டும்.

2019 காலப்பிரிவிற்குப் பின் சூழ்நிலைகளின் கைதியாக சகபாடிகளின் கட்டுக்கடங்காமையுடன் தனித்து விடப்பட்ட நிலையில்  கட்சியின் தலைமையாகவும், எதிர்கட்சியின் பங்காளராகவும் அவரது அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் தொழிற்பாடுகள் ஆதங்கத்தின் வெளிப்பாடுகளாக இருந்தமையை உணர முடிந்தது.

ஒட்டு மொத்த தேசத்தினதும் வங்குரோத்து அரசியல் கலாசாரத்தின் தவிர்க்க முடியாத பங்காளர் ஆகிப்போன தனித்துவ அடையாள அரசியல் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள புதிய கட்டமைப்பு மற்றும் முறைமை மாற்றங்களால் புடம் போடப்பட்டு புதிய தலைமுறையினரிடம் கையளிக்கப்பட வேண்டும்.

அரசியல் சாணக்கியமும், சட்ட மற்றும் நீதித்துறைப் பின்புலமும், இராஜதந்திர உறவுகளும், மும்மொழிப் புலமையும் பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சியின் பிரதானி அந்தஸ்த்துடன் முஸ்லிம் அரசியல் பிரவாகத்தின் அடையாளமாகவும் ஓங்கி ஒலிக்கும் உறுதியான குரலாகவும் பத்தாவது பாராளுமன்றத்திலும் பயன்பட வேண்டும்.

குறிப்பாக ஆளும் கட்சி அணியில் கிழக்கு மாகாணத்தை பிரதிநித்துவம் செய்யக் கூடிய பிரதிநிதிகள் தெரிவாகாத நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ள இரண்டு பிரதி நிதிகள் தேசியப்பட்டியல் மூலம் கிடைக்கவுள்ள மூன்றாம் நான்காம் பிரதி நிதிகளுடன் முஸ்லிம் சமூக அரசியல் அபிலாஷைகளின் ஓங்கி ஒலிக்கும் உறுதியான குரலாக தலைமையை புனர்நிர்மானம் செய்து கொள்ள வேண்டும்.

அதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன், அவரது கட்சியின் பிரதிநிதி ஆகியோருடன் மேற்சொன்ன அதே காரணங்களுக்காக புரிந்துணர்வோடு சமூக ஐக்கியத்தை பாராளுமன்றத்தில் பிரதிபலிக்க வேண்டும்.

நெருக்கடி மிகுந்த காலகட்டங்களில் சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளராக தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடனும் ஏனைய உறுப்பு கட்சிகளுடனும் சிறந்த புரிதலுடன் பங்காற்றிய அவர் ஆளும் கட்சியுடன் சாணக்கியமாகவும் புரிந்துணர்வுடனும் புதிய அரசியல் களநிலவரங்களை கையாள வேண்டும் என நாம் எதிர்பார்கின்றோம்!

வரலாறு காணாத நெருக்கடிகளுக்கு சமூகம் முகம் கொடுத்த கால கட்டத்தில் தேசிய ஷூரா சபையின் பொதுச் செயலாளராக நான் எடுக்கும் அழைப்புகளுக்கு மதிப்பளித்து தனது பங்களிப்பை வழங்கிய அவர் இன்றும் சமூக தேசிய விவகாரங்களில் எனது கருத்துக்களை சகிப்புத் தன்மையோடு உள்வாங்கும் பக்குவத்தை கொண்டிருப்பதனை குறிப்பிட்டே ஆக வேண்டும்.

தேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத புரட்சிகரமான அரசியல் பிரளயத்தில் அள்ளுண்டு செல்லாது முஸ்லிம் காங்கிரஸின் தலைமையை தக்க வைத்த கண்டி மாவட்ட மக்களுக்கும்  மைத்துனர் ரவூஃப் ஹகீமிற்கும் எனது தனிப்பட்ட மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!

மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்
✍️ 17.11.2024 || SHARE

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button