News

ஜனாதிபதி, அரசியலமைப்பில் ஓட்டைகளைத் தேடுகிறார்

இலங்கையின் வரலாற்றில் இது ஒரு முக்கிய தருணமாகும். அரசியலமைப்பில் உள்ள இடைவெளிகளைத் தேடிவருவது தற்போதைய ஆட்சியாளர்களினதும் அவரது அடியாட்களினதும் தேசிய பணியாக மாறியுள்ளது. மக்கள் ஆணையும், மக்களின் நம்பிக்கையும் அங்கீகாரமும் இன்றி வாக்குகளால் வெற்றி பெற முடியாத நாட்டின் தற்போதைய ஜனாதிபதி, அரசியலமைப்பில் ஓட்டைகளைத் தேடும் நபராக மாறியுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இவர்களால் நாட்டைக் கட்டியெழுப்பவோ அபிவிருத்தி செய்யவோ முடியாது. நாட்டில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான விருப்பமும் அவர்களிடம் இல்லை. அரசியலமைப்பில் உள்ள இடைவெளிகளில் ஊடுருவி அவர்களை போஷித்து வரும் நட்புவட்டார மானங்கெட்ட சிறு, கூட்டாளிகளை பாதுகாப்பதே அவர்களின் நோக்கமாக அமைந்து காணப்படுகிறது.

தேர்த்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியே அன்றி மக்கள் தெரிவால் பதவிக்கு வந்தவர் அல்லர். வாக்குகள் மூலம் வந்தவர் அல்ல. அவருக்கு சாதாரண மக்கள் மீது எந்த உணர்வும் இல்லை. தன்னை ஆட்சிக்கு கொண்டு வந்த நாட்டை அழித்த திருடர்கள் கூட்டத்தை பாதுகாப்பதே தனது ஒரே நோக்கமாக கொண்டு செயற்பட்டு வருகின்றார் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் அரண் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் நேற்று(7) கம்பஹா மாவட்டத்தை மையமாக கொண்டு மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் தலைவர்கள் மற்றும் கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருந்திரளான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

தற்போதைய அரசாங்கம் தோல்வியைத் தழுவும் என்றே சமீபத்தைய சகல கண்கானிப்பு அறிக்கைகளும் சொல்கின்றன. ஜனாதிபதி தேர்தல் மூலம் மீண்டும் இவர்களால் அதிகாரத்துக்கு வர முடியாது. மாளிகைகளில் சதிகளை தீட்டி, செய்திகளை உருவாக்கி திருடர் கூட்டத்துடன் இணைந்து அரசியலமைப்பை மீறி பேராசை சதியை, வஞ்சக அரசியலை 24 மணி நேரமும், 365 நாட்களும் முன்னெடுத்து வருகிறார். ஊழல் தரப்புடன் இணைந்து ஜனாதிபதி முன்னெடுத்து வரும் இந்த மானங்கெட்ட சதியை மக்கள் பலத்தால் தோற்கடிப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வரலாற்றில் முதன்முறையாக இடதுசாரி சக்திகளும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளன.

மக்கள் முன் வருவதற்கு தற்போதைய ஆட்சியாளர்கள் அஞ்சுகிறார்கள். ஆனால் வரலாற்றில் முதன்முறையாக இடதுசாரி சக்திகள், வலதுசாரி சக்திகள், சிங்கள தமிழ் முஸ்லிம் பர்கர்கள் என பெரும்பாலானோர் ஐக்கிய மக்கள் சக்தியையும் ஐக்கிய மக்கள் கூட்டணியையும் சுற்றி திரண்டுள்ளனர்.

அண்மைக்காலத்தில் பெரும்பான்மை பலத்தினாலும் அல்லது சிறுபான்மை சக்திகளினாலும் வேறு பிரிவுகளின் ஆதரவினாலுமே அரசாங்கங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் இம்முறை இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி பேதமின்றி ஐக்கிய மக்கள் சக்தி வரலாற்று சிறப்பு மிக்க மக்கள் ஆணையைப் பெற்றுக் கொள்ளும்.

வகுப்புவாத பிளவுகளுக்கு அப்பால் மக்கள் வாத அரசாங்கம் கட்டியெழுப்பப்படும். வெறும் காண்பிப்புகளுக்கு பதிலாக சேவையை முழுமையான கடமையாக கொண்டு ஆட்சி முன்னெடுக்கப்படும்.

இனவாதம், குழுவாதங்களை இல்லாதொழித்து முற்போக்கு தேசியவாதத்தை முன்னிலைப்படுத்திக் கொண்டு நடுத்தர பாதையில் சமூக ஜனநாயகப் பயணத்தின் மூலம் நாட்டை மீண்டும் கட்டியெழுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

திருடர்களுடன் இணைந்து பணியாற்ற முடியாது என்பதால் பிரதமர் பதவியை ஏற்கவில்லை.

நான் பிரதமர் பதவியை ஏற்கவில்லை என்று தற்போதைய ஜனாதிபதி கூறிவருகிறார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அந்தக் கோரிக்கையை முன்வைத்தபோது, மக்களின் நிபந்தனைகளையும் ஜனநாயக கோரிக்கைகளையும் முன்வைத்தேன். நான் மக்கள் போராட்டத்திற்கு துரோகம் இழைக்கவில்லை. கோத்தாபயவிடம் நிபந்தனைகளுக்கு இணங்குமாறு கோரிய போதும், தற்போதைய ஜனாதிபதி பின் கதவு வழியாக சென்று தற்போதைய அதிகாரத்தை பெற்றுக்கொண்டார்.

ஜனாதிபதி அவர்கள் பதவிக்கு பேராசை கொண்டவராக இருந்தாலும், எனக்கு அவ்வாறானதொரு நோய் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

2018 ஒக்டோபர் ஆட்சிக் கவிழ்ப்பின் போது, ரணிலை நீக்கிவிட்டு பிரதமராக பதவியை ஏற்குமாறு 71 தடவைகள் அழைக்கப்பட்டேன். ஆனால் கொள்கை ரீதியான அரசியலை முன்னெடுப்பவன் என்ற அடிப்படையில் சரியான நிலைப்பாட்டில் இருந்தேன். சதிகள் மூலம் ஆட்சிக்கு வருவது ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையல்ல. ஒரு ஆசனத்தைக் கூட வெல்ல முடியாத அரசியல் குப்பைத் தொட்டியில் வீழ்ந்தவர்களுக்கு அதிகாரம் இல்லாமல் தூக்கம் வராது. நாம் அவ்வாறு சதிகளில் ஈடுபட மாட்டோம். மக்கள் சக்தி ஐக்கிய மக்கள் சக்தியைச் சுற்றியே இருக்கின்றனர். மக்கள் வழங்கும் ஆணை மூலம் ஆட்சிக்கு வருவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்பு சதிகளால் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. மக்கள் ஆணையால் மட்டுமே இந்த முறைமை மாற்றத்தை ஏற்படுத்த முடியும். 220 இலட்சம் மக்களுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தமே ஐக்கிய மக்கள் சக்திக்கு இருக்கிறது. ஐக்கிய மக்கள் சக்திக்கு திருடர்களுடன் எந்த ஒப்பந்தமும் இல்லை. மக்கள் ஆணைக்கு அமைய இந்த மஜர அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்போம் என அவர் சுட்டிக்காட்டினார்.

88/89 பயங்கரவாதிகள் இன்று முகமூடி அணிந்து கொண்டு உலா வருகின்றனர்.

கையை வெட்டி, மரண தண்டனை வழங்கிய பழைய பயங்கரவாதிகள் முகமூடி அணிந்து கொண்டு தற்போது முறைமை மாற்றத்தை ஏற்படுத்த அதிகாரத்தை கோரி நிற்கின்றனர். IMF க்கு அன்று திட்டித் தீர்த்தவர்கள் இன்று IMF-ஐ முத்தமிடுகிறார்கள். இந்தியாவை பேய் போன்று எதிர்த்தவர்கள் இன்று இந்தியாவுடன் காதல் கொண்டுள்ளனர். இன்று இவர்களது உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக கிராமத்திற்கு நீதிமன்ற அதிகாரத்தை வழங்குவதாக இந்த பேய்க் கூட்டம் கூறி வந்தது. 88 ஆம் காலப்பகுதிகளில் தமது நீதிமன்றங்கள் ஊடாக இந்நாட்டின் எத்தனை குடிமக்களை மரணப் படுக்கைக்கு கொண்டு சென்றனர் என்பதை இந்நாட்டு மக்கள் மறந்துவிடவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இவர்கள் நமது நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக இருப்பதோடு, நாட்டின் வளர்ச்சிக்கு எதிராகவும் செயற்பட்டு வருகின்றனர். எந்த மதத்தையும் நம்பாத இவர்கள் நிராகரிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button