News

ஐ. எம். எப் தொடர்பில் அராசங்கத்தால் இப்போது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்து செவிமடுத்த போது ஒருவித அதிர்ச்சிக்கு ஆளானோம் ; சஜித்

கடந்த அரசாங்கத்தின் மக்களை அழுத்தங்களுக்கு ஆளாக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தையே தற்போதைய அரசாங்கமும் முன்னெடுப்பதாக கூறுவதானது மக்கள் ஆணைக்கு எதிரான செயல்பாடாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியின்  கொள்கை பிரகடன உரைக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

தற்போதைய அரசாங்கம் தேர்தல் மேடைகளில் முன்வைத்த சில விடயங்கள் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களோடு ஒப்பிடும் போது முரண்பாட்டை காண்பிக்கின்றன. சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டில் இருதரப்பு கடன்கள், பிணை முறிப் பத்திரக் கடன்கள் போன்றவற்றில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்து செவிமடுத்த போது ஒருவித அதிர்ச்சிக்கு ஆளானோம். ஏற்கனவே  இணக்கப்பாடு காணப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தை மாற்றி புதிய ஒப்பந்தத்தை எட்டுவதாக தற்போதைய ஆட்சியாளர்கள் தேர்தல் மேடைகளில் பிரஸ்தாபித்தனர். ஆனால் அரசு தற்போது அதில் இருந்து விலகி செயல்பட்டு வருகிறது. இது பாரதூரமான விடயம். 

நாட்டு மக்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் ஆணையை வழங்கியுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தில் உள்ள மக்களுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தும் விடயங்களுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பின்பற்றிய செயற்பாடுகளையே தற்போதைய அரசாங்கமும் இவ்விவகாரத்தில் பின்பற்றி வருவதாகத் தெரிகிறது. முன்னாள் ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்தப்பட்ட சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை அமுல்படுத்த வேண்டாம் என்றே மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆணையைப் பெற்றுத் தந்தனர் 

சர்வதேச நாணய நிதியத்தின் சட்டகத்திற்குள்  இருந்தவாறு உடன்பாடு காணப்பட்டுள்ள இணக்கப்பாட்டை மக்களுக்கு சாதகமாக  மாற்றுவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல் மேடைகளில் தெரிவித்தது. ஆனால் இன்று தற்போதைய அரசாங்கம் இந்த இணக்கப்பாட்டை முன்னர் இருந்தவாறு பழைய வழியிலேயே முன்னெடுத்துச் செல்வதைக் காணமுடிகிறது. வறுமையை ஒழித்து, கர்ப்பிணி தாய்மார்கள், சிசுக்கள் மற்றும் சிறுவர்களுக்கான திட்டத்தை முன்னெடுத்து, ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கி, தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் விதமாகவும், நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறையினருக்கு பல்வேறு ஏற்றுமதி சந்தைகளில் சிக்கல்கள் இருந்தாலும், அவற்றை நீக்குவதற்கு ஏற்றாற் போலான இணக்கப்பாட்டை நாம் காண்போம் என தெரிவித்திருந்தோம். இந்த அரசாங்கமும் மேற்குறித்த விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். இவற்றை முன்னெடுத்து நடைமுறைப்படுத்தும் விடயத்தில் நாம் இந்த அரசாங்கத்திற்கு எமது ஆதரவை நல்குவோம்.

தற்போதுள்ள ஐ.எம்.எப். உடன்படிக்கையை அவ்வாறே நடைமுறைப்படுத்த தற்போதைய அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக தெரிவித்தமையானது நம்மெல்லோரையும் ஆச்சரியப்படுத்துகிறது. வற்   மற்றும் வரிக் கட்டமைப்பையும் அத்துடன் முழுப் பொருளாதாரச் செயல்முறையையும் பழைய முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த மக்கள் ஆணை வழங்கப்படவில்லை என்பதால், வாக்குறுதியளிக்கப்பட்ட மாற்றங்களை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கிறோம். இதற்குத் தேவையான ஆதரவை வழங்குவோம் 

நாடு வீழ்ந்துள்ள பெரும் நெருக்கடியான சூழ்நிலையில் அனைவரும் கைகோர்த்து நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் சகல செயலுக்கும் நாம் உதவ வேண்டும். ஏதேனும் தவறு நடப்பின் அந்த தவறை சுட்டிக்காட்டுவோம். அதேபோல் அந்த தவறுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button