News

500 கோடி ரூபாவுக்கும் அதிகளவான பெறுமதி கொண்ட 200 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் 10 பேருடன் சிக்கியது தொடர்பில் மேலதிக விபரங்கள் வெளியாகின..

500 கோடி ரூபாவுக்கும் அதிகளவான பெறுமதி கொண்ட 200 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் காலி மாபலகம பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், சந்தேகத்தின் பேரில் 10 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 18ஆம் திகதி மாத்தறை, கந்தர நுன்னவெல்ல பகுதிக்கு படகு மூலம் போதைப்பொருள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது.

இதன்படி, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மாபலகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு வேன் ஒன்றில் போதைப்பொருள் கொண்டு வரப்பட்ட விடயத்தை அறிந்துள்ளனர்.

விசாரணையின் பின்னர், மாத்தறை, கல்கிஸ்ஸை, இரத்மலானை ஆகிய பகுதிகளில் சந்தேகத்தின் பேரில் 10 பேரை பொலிஸார் கைது செய்ததுடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம், மாபலகமவிலுள்ள வீடொன்றில் இருந்த போதைப்பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இதன்போது 200 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மற்றும் 70 கிலோகிராம் ஹெராயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவற்றின் பெறுமதி 500 கோடி ரூபாய்க்கு அதிகளவாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த போதைப்பொருள் தொகை பாகிஸ்தானில் இருந்து நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், அவற்றை இந்த நாட்டுக்கு அனுப்பியது யார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 29,42, 44, 46 மற்றும் 58 வயதுடைய கந்தர, தெவிநுவர மற்றும் பெலியத்த பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

இதேவேளை, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவும் (21) காலை மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு விஜயம் செய்து குறித்த போதைப்பொருள் கையிருப்பை பார்வையிட்டார்.

அங்கு உரையாற்றிய பதில் பொலிஸ் மா அதிபர், அண்மைக்கால வரலாற்றில் நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரியளவான போதைப்பொருள் இது என குறிப்பிட்டார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button