அநுர அரசாங்கத்தில் போதைவஸ்து கடத்தல், விற்பனை , பாவித்தல் போன்றவைகளுக்கு முற்றுப்புள்ளி!
கலாபூஷணம் பரீட் இக்பால்
அண்மையில் 500 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய 200 கிலோ கிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளும் 70 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் காலி மாபலகம பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டது. மேலும் போதை வஸ்து வேட்டை தொடர்கிறது.
குடும்ப வாழ்வை சீரழிக்கும் நாட்டை குட்டிச்சுவராக்கும் போதைவஸ்து பாவனையை வேரோடு களைய அநுர அரசாங்கம் தயாராகிவிட்டது. இதற்காக போதைப் பொருள் கட்டுப்பாட்டுச் சபையினர், போதை வஸ்து கடத்தல், விற்பனை, பாவித்தல் போன்றவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தயாராகிவிட்டனர். மேலும் போதை வஸ்து வேட்டை தொடர்கிறது. இது பாராட்டப்பட வேண்டிய வேண்டிய விடயமாகும்.
நாம் ஒவ்வொருவரும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபைக்கு ஒத்துழைப்பாக இருப்பது அவசியம். போதைவஸ்து பாவிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள், நாட்டுக்குள் கடத்தி வருபவர்கள் யாராக இருந்தாலும் எமக்கு தெரிந்திருக்கும் பட்சத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபையினருக்கு தெரிவிப்பது நாம் எமது நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் செய்யும் பேருதவியாகும்.
போதைப் பொருட்கள் பண்டைக்காலம் முதல் பாவனையில் இருந்து வந்துள்ளன. அபின், கஞ்சா, கள்ளு, சாராயம், கசிப்பு, பீடி, சிகரெட், சுருட்டு என்பன மக்களால் பாவிக்கப்பட்டு வந்தன. விஞ்ஞான வளர்ச்சி காரணமாக பண்டைக்கால போதைவஸ்துக்கள் நவீன உருவிலும் இலகுவான தன்மையிலும் தயாரிக்கப்பட்டுள்ளன. மிகச் சிறியளவு போதைவஸ்தை பாவிப்பதன் மூலம் அதிகளவு போதை தரக் கூடியதாக தயாரிக்கப்படுகின்றன. உதாரணமாக பத்து கிராம் ஹெரோயினை சுமார் 2500 பேர் வரையில் பாவித்து போதை ஏற்றிக் கொள்ள முடியும். மேலும் இக்காலத்து போதைவஸ்துக்கள் இலகுவாக கடத்தவும் பரிமாற்றம் செய்யவும் வாய்ப்பாக அமைந்துள்ளன.
நவீன உலகில் பண்டைக் காலத்து போதைவஸ்துக்கள் மாதிரி அல்லாது மேற்கத்தேய நாடுகளால் ஹெரோயின், கொகேய்ன், கோடீன், மோர்பீன், கனபிஸ், மர்ஜுவானா, ஹஸீஸ், ஐஸ், கஞ்சா கலந்த போதைவஸ்து போன்ற நவீன போதைவஸ்துக்களும் மற்றும் மாத்திரை வடிவில் தயாரிக்கப்படும் எல்.எஸ்.டி. தூக்க மாத்திரைகளும் சர்வதேச ரீதியில் பல நாடுகளுக்கும் கடத்தப்படுகின்றன. உலகில் சில நாடுகளின் பொருளாதாரம் போதைவஸ்துக்கள் வர்த்தகத்திலே தங்கியுள்ளது. குறிப்பாக பெரு, வெனிசூலா, கொலம்பியா ஆகிய லத்தீன் அமெரிக்க நாடுகளை குறிப்பிடலாம்.
தீவிர போதைவஸ்து பாவனையாளர்களிடையே ஊசி மூலம் போதை பொருளை உடலில் செலுத்திக் கொள்ளும் பழக்கமும் உள்ளது. இத்தகைய போதைவஸ்து பாவனையாளர்களிடையே இலகுவாக எய்ட்ஸ் வைரஸ் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. அமெரிக்காவில் எய்ட்ஸ் நோயாளர்களில் 26 சதவீதமானோர் இத்தகையவர்களே என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
இளைஞர்கள் குறுக்கு வழியில் இன்பம் அனுபவிக்க போதைப் பொருட்களை உட்கொள்கின்றனர். இலங்கையில் தற்போது லட்சக்கணக்கானோர் போதைவஸ்துக்கு அடிமையாக உள்ளனர் என்று ஒரு தகவல் தெரிவிக்கின்றது.
போதைவஸ்து பாவனை உலகை நீண்டகாலமாக அச்சுறுத்தி வருகின்றது. இவற்றைப் பாவிப்பதால் மக்கள் பல்வேறு நோய்களுக்கு உட்படுவதோடு தனது குடும்பத்துக்கு கெட்ட பெயர் உண்டாக்குவதும் பிறருக்கு தீங்கு விளைவிப்பவராகவும் மாறுகின்றனர்.
இலங்கையின் திறந்த பொருளாதார கொள்கை, உல்லாசப் பயணிகளின் வருகை என்பனவற்றால் நவீன போதைவஸ்துக்கள் நாட்டினுள் பிரவேசிக்க வழிவகுத்தன. இலங்கையை பொறுத்தவரையில் நவீன போதைவஸ்துக்கள் 1980 ஆம் ஆண்டளவில் பரவத் தொடங்கியது. இலங்கையில் முதலாவது ஹெரோயின் விற்பனையாளர் 1981 ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி 270 கிராம் ஹெரோயினுடன் களுத்துறை மாவட்டத்திலுள்ள ஒரு ஊரில் கைது செய்யப்பட்டார். போதைவஸ்து பொருட்கள் பாவிப்பது, கடத்துவது, வைத்திருப்பது போன்றவற்றுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. அநேகமான நாடுகளில் இவற்றுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இலங்கையிலும் போதைவஸ்து கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு உடனடி மரண தண்டனை அளிப்பதன் மூலமே போதைவஸ்து பாவிப்பதனால் ஏற்படும் தீங்குகளில் இருந்து எமது நாட்டு சமுதாயத்தை பாதுகாக்க முடியும்.
குடும்ப வாழ்வை சீரழிக்கும் நாட்டை குட்டிச் சுவராக்கும் போதைவஸ்து பாவனையை வேரோடு களைய ஒவ்வொருவரும் திடசங்கற்பம் பூணுதல் அவசியம். இதற்காக போதைப் பொருள் கட்டுப்பாட்டுச் சபை போதைப் பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் 1984 ஆம் ஆண்டு தொடக்கம் அக்கறையுடன் செயற்படுகிறது. நாம் ஒவ்வொருவரும் போதைப் பொருள் கட்டுப்பாட்டுச் சபைக்கு ஒத்துழைப்பு நல்குதல் அவசியம். போதைவஸ்து பாவிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள், நாட்டுக்குள் கடத்தி வருபவர்கள் யாராக இருந்தாலும் எமக்குத் தெரிந்திருக்கும் பட்சத்தில் போதைப் பொருள் கட்டுப்பாட்டுச் சபைக்கு தெரிவிப்பது நாம் எமது நாட்டுக்கும் எமது சமுதாயத்துக்கும் செய்யும் பேருதவியாகும்.
‘போதைவஸ்து பாவனைக்கு அடிமையானோரை அதிலிருந்து மீட்டெடுப்பது, புதிதாக போதைவஸ்து பாவனைக்கு அடிமைப்படாமல் இளம் சந்ததியினரை பாதுகாப்பது’ என்ற இலக்கிலேயே அரசாங்கம் பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது பாராட்டத்தக்கது. அதேநேரம் இன்று இலங்கையில் போதைவஸ்து பாவிப்பது, விற்பனை செய்வது, நாட்டிற்குள் கொண்டு வருவது ஆகிய நடைமுறையில் உள்ள சட்டங்களைப் பொறுத்தவரையில் தண்டனை திருப்திகரமாக இல்லை.இலங்கையில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் திடீர் திடீர் சுற்றிவளைப்புகள் இடம்பெறுகின்றன. பல ஆயிரம் கிலோ கஞ்சா, ஹெரோயின் போதைவஸ்துக்கள் கைப்பற்றப்பட்டு தீயிட்டு கொளுத்தப்படுகின்றன. இவ்வாறு அக்கறையுடன் செயற்படுவது பாராட்டத்தக்கது.
போதைவஸ்து பாவனையை இல்லாதொழிக்க சில நாடுகளால் போதை குறைந்த சில பொருட்களை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போதைவஸ்து பாவனையை போதைப் பொருளை வைத்தே தடுக்க முயற்சிப்பது முறையான தீர்வல்ல என சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
போதைவஸ்து பாவனையானது பொதுவாக சிறுவர் பராயத்தில் ஏற்பட்டுவிடுவதாக சில அறிக்கைகள் குறிப்பிடுகின்றது. பாடசாலைக் காலத்தில் தீய நண்பர்களின் சகவாசம் காரணமாக இது ஏற்படுவதாக கூறப்படுகின்றது. உதாரணமாக பாடசாலையில் ஆறாம் ஆண்டு மாணவர்கள் ஆறாம் ஆண்டு மாணவர்களுடனேயே பழகுதல் வேண்டும். ஏழாம் ஆண்டு மாணவர்கள் ஏழாம் ஆண்டு மானவர்களுடனேயே பழக வேண்டும். வித்தியாசமாக வேறு ஆண்டு மாணவர்களுடன் நண்பர்களாக பழகுவது நல்லதல்ல என்று மேற்கத்தேய பேராசிரியர் ஒருவர் தெரிவிக்கிறார். அப்படிப் பழகும்போதுதான் கெட்ட விடயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இந்த விடயத்தில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் சக ஆண்டு மாணவர்களுடன் பழகுகிறார்களா அல்லது ஆண்டு கூடிய மாணவர்களுடன் பழகுகிறார்களா என்பதை அவதானிக்க வேண்டும். பாடசாலைப் பருவத்தில் தீய நண்பர்களின் சகவாசம் காரணமாக ஆரம்பத்தில் புகை பிடித்தலில் இருந்து போதைவஸ்து பாவனை வரை வளர்வதாக கூறப்படுகிறது. பெற்றோர்கள் இவ்விடயத்தில் தமது பிள்ளைகள் புகை பிடித்தல், மது அருந்துதல், போதைவஸ்துக்கு அடிமையாகுதல் போன்ற விடயத்தில் தொடர்பில் இருக்கிறார்களா என்பதனை அவதானித்துக் கொண்டே இருக்க வேண்டும். கெட்ட பழக்கங்களை முளையிலேயே கிள்ளி விடுவது இலகுவான காரியமாகும். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் மீது மிகுந்த அவதானம் இருப்பின் இவ்வாறான கெட்ட விடயங்களில் இருந்து தங்களது பிள்ளைகளை காப்பாற்ற முடியும். பெற்றோர்கள் அளவுக்கதிகமாக சுதந்திரமும் பணமும் அளிப்பதன் மூலமே பிள்ளைகள் கெடுவதற்கு வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது. எனவே பெற்றோர்கள் பிள்ளைகள் மீது மிகுந்த கவனம் செலுத்துதல் மூலம் இவ்வாறான கெட்ட செயல்களில் இருந்து பிள்ளைகளை நாட்டின் நற்பிரஜைகளாக உருவாக்க முடியும்.
போதைவஸ்து பாவனை இன்று புதிய வடிவத்தில் மாணவர்கள் மத்தியில் பரவி வருவதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதாவது சில மருந்து வகைகளை மாணவர்கள் போதைக்காக பயன்படுத்தி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போதைவஸ்துக்களை பெற்றுக்கொள்வதை விட மருந்து வகைகளை பெற்றுக்கொள்வது எளிதானது என்பதனால் இதன் மூலம் போதையை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். மருத்துவர்களால் மனநலம் குன்றிய நோயாளர்களுக்கு பரிந்துரைக்கும் மருந்தை போதைப்பொருள் பாவனையாளர்கள் அதிகமான அளவில் பாவிப்பது அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் மேற்படி மருந்து வகைகள் அதிகமாக பயன்படுத்துகிறார்களா என்றும் அவதானிக்க வேண்டும்.
தங்களது பிள்ளைகளிடத்தில் தன்னம்பிக்கை குறைதல், படிப்பில் ஆர்வம் குறைதல், விளையாட்டுக்களில் ஆர்வம் குறைதல், சோம்பல், சற்று ஆர்வம் குறைந்த தோற்றம், பெற்றோரிடம் வாக்குவாதம் செய்வது, ஆசிரியரிடம் அதிக வாக்குவாதம் செய்வது காணப்பட்டால் பெற்றோர்கள் கூடிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளேயாயினும் அளவுக்கு மீறி எடுத்துக்கொள்வது ஆபத்தில் முடியும் என்பதை பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் விளக்கமளிக்க வேண்டும்.
தங்களது பிள்ளைகள் யாராவது போதைவஸ்து பாவனைக்கு அடிமையாகி இருப்பது தெரிந்தால் உடனடியாக மருத்துவமனை, போதைப் பொருட்கள் அடிமைத்தனத்தை போக்கும் இடங்களுக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளிப்பது முக்கியமானதும் அவசியமானதுமான விடயமாகும்.
போதைவஸ்து பாவனையை முற்றாக ஒழிப்பதற்கு முதலாவது அரசாங்கம் போதைவஸ்து கடத்தல்காரர்களுக்கு உடனடி மரண தண்டனை அளிக்க வேண்டும். இரண்டாவது பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை தீய நண்பர்களின் சகவாசத்திலிருந்து பாதுகாத்து அவதானத்துடன் வளர்த்தெடுக்க வேண்டும்.
*கலாபூஷணம் பரீட் இக்பால்-யாழ்ப்பாணம்*