இஸ்லாத்தின் அடிப்டைகளை அறியாதவர்கள் அமைச்சரவையில் முஸ்லிம்கள் பற்றி முடிவுளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படலாம்.
இஸ்லாத்தின் அடிப்டைகளை அறியாதவர்கள் அமைச்சரவையில் முஸ்லிம்கள் பற்றி முடிவுளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படலாம்.
சென்றல் சிலோன் முஸ்லிம் அஸம்பிலி தெரவிப்பு
(ஜே.எம்.ஹாபீஸ்)
வசதியில்லாதவர்களுக்கு ‘ஹஜ்’ கடமையில்லை என்பதை அறியாத ஒரு அமைச்சர் “வசதியில்லாதவர்களை மக்காவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்போம்” எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது. முஸ்லிம் பிரதி நிதி ஒருவர் இல்லாத அமைச்சரவையில் இது போன்ற பல தவறான முடிவுகளை எடுக்க வாய்ப்பு உள்ளது என ‘சென்றல் சிலோன் முஸ்லிம் அஸம்பிலி’ தெரிவித்தது.
மடவளை பஸார் முஸ்தபா வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலே அதன் உபதலைவரும் முன்னாள பாத்தும்பறை பிரதேச சபையின் உபதலைவரும், முன்னாள் முஸ்லிம் சமய விவகார அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான எம். றஹ்மத்துல் மலீக் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்திலுள்ள முன்னால் பிரதேச சபை முஸ்லிம் அங்கத்தவர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். அதில் அவர் மேலும் தெரிவித்தாவது-
சுதந்திரம் கிடைத்து முதல் இது காலவரை சகல அமைச்சரவைகளிலும் குறைந்தது ஒரு முஸ்லிம் பிரதிநிதியாவது இருந்து வந்துள்ளனர். அந்த வகையில் கடந்த காலங்களில் எம்.எச்.முஹம்மத், பதியுதீன் மஹ்மூத், ஏ.சி.எஸ் ஹமீத், எம்.எச்.எம். அஷ்ரப், ஏ.ஆர்.எம்.மன்சூர், ஏ.ஆர்.எம்.ஏ.காதர் இப்படி பலபேர் இருந்தனர். அதேநேரம் தகுதியான முஸ்லிம் பிரதி நிதிகள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகாத சந்தர்பங்களில் தேசிய பட்டியல் மூலம் தெரிவானவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது. கடந்த காலத்தில் கோட்டாபே ராஜபக்ச ஆட்சியின் போது கூட ஒரு முஸ்லிம் அங்கத்தவர் கூட அக்கட்சியில் தெரிவாகாத நிலையில் அலி சப்ரி அவர்கள் தேசிய பட்டியல் மூலம் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அவர் அமைச்சராகும் போது முன் அரசியல் அனுபவம் இல்லை என அவர் கைவிடப்பட வில்லை. பொறுப்பு வாய்ந்த் வெளி விவகார அமைச்சு, நிதி அமைச்சு. நீதி அமைச்சு போன்ற பல அமைச்சுக்கள் அவருக்கு வழங்கப்பட்டன. இது போல் பல விடயங்களைக் கூறலாம்.
இப்படியாக ஒரு முஸ்லிம் நியமிக்கப்படாமைக்கு தக்ககாரணம் எதுவும் இல்லை. அதனை மூடி மறைக்க சிறுபிள்ளைத் தனமான வாதங்களை முன் வைவக்கக் கூடாது. எனவே உடன் முஸ்லிம் ஒருவர் அமைச்சரவைக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கும் படி அரசைக் கோருகிறோம் என்றார்.
அண்மையில் அக்குறணையில் வைத்து ஒரு அமைச்சர் தெரிவித்த கருத்தில் ‘வசதி குறைந்தவர்களை ஹஜ் செய்ய நாம் அனுப்புவோம்’ என்றார். அப்படி வசதியில்லாதவர்களுக்கு ஹஜ் கடமையுமில்லை. அரசு செலவில் ஹஜ் செய்தால் அது அவரது கடமை நிறைவேறியதாகக் இஸ்லாத்தின் பார்வையில் கருதவும் முடியாது. அவர் உரியான முறையில் உழைத்த சொந்த பணத்திலேதான் ஹஜ் செய்ய வேண்டும் என்பது கூறுயவருக்கு தெரியாது. இது போன்ற பல தவறுகளை எதிர் காலத்தில் அமைச்சரவையில் மேற்கொள்ள முடியும், மேலும் வெளிநாட்டுகளின் தலையீடு காரணமாக முஸ்லிம்களுக்கு அமைச்சு வழங்கப்படாமல் உள்ளது என்ற சந்தேகத்தையும் பலர் தெரிவித்து வருகி்னறனர் என்று அவர் குறிப்பிட்டார்.
அக்குறணை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.எம். ஹுசைன் தெரிவித்தாவது-
அமைச்சராக நியமிக்க முஸ்லிம்களில் தகுதியுள்ளவர்கள் இல்லை என்று காரணம் கூறப்பட்டு வருகிறது. அப்படி தகுதி இல்லாதவர்கள் என்று கூறக்கூடியவர்கள் யாரும் இல்லை. அப்படி இருந்தால் அது பொதுமக்களின் பிழை அல்ல. அப்படியானவர்களை அரசுதான் தேர்தலில் நிறுத்தியது. எனவே அதற்கு அவர்கள்தான்பொறுப்பு என்றார்.
இவ் ஊடக சந்திப்பில் யடிநுவர பிரதேச சபையின் முன்னாள் அங்கத்தவர்களான எம்.ரம்சீன், எம்.ரிஸ்வி மற்றும் முன்னாள் அமைச்சர் ஹலீம் அவர்களின் இணைப்புச் செயலாளர் எம். பாரூக், பாத்தும்பறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான அஸ்மி ஹசீம், ஏ.எம்.பிரதவ்ஸ், பன்வில பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்.ஹாஜா மொஹிதீன் உற்பட பலர் சென்றல் சிலோன் முஸ்லிம் அஸம்பிலி சார்பாக கருத்து வெளியிட்டனர்.