பாலின அடிப்படையிலான வன்முறைகளை தடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் கொண்ட நிகழ்ச்சித் திட்டம் பிரதமர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
‘பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் கொண்ட நிகழ்ச்சித் திட்டம்’ நவம்பர் 25ஆம் திகதி கொழும்பு நகர மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
‘பாலின அடிப்படையிலான வன்முறை இல்லாத இலங்கையை நோக்கி: அனைவருக்கும் பாதுகாப்பான பொது இடைவெளி’ என்ற தொனிப்பொருளில் இந்த வருடம் குறித்த நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வின் பிரதம அதிதியாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பங்கேற்றிருந்தார்.
பாலின அடிப்படையிலான வன்முறைகளை (GBV) இல்லாமல் செய்தல் மற்றும் இலங்கைக்குள் பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கும் பொது இடங்களை உருவாக்குவதன் தேவை குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
பல்துறை சார்ந்தவர்களின் ஒத்துழைப்பு மற்றும் கொள்கை அமுலாக்கத்தின் ஊடாக GBV தீர்வு காண்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதாக பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
இதற்கென கூட்டு செயற்பாடுகளின் முக்கியத்துவம் தொடர்பிலும் விசேடமாக கருத்து தெரிவித்த பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
‘GBV – அற்ற இலங்கை என்ற நோக்கமானது, அனைத்து பிரஜைகளுக்கும் பாதுகாப்பான இடத்துடன் ஆரம்பமாகிறது. குறித்த நிகழ்ச்சித் திட்டம் வெறுமனே அடையாளம் மாத்திரம் அல்ல. மாறாக, பாலின அடிப்படையிலான வன்முறைகளை தடுப்பதற்கு நிரந்தரமான நடவடிக்கை எடுக்க அனைத்து பிரஜைகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென’ அவர் தெரிவித்தார்.
வன்முறைகளுக்கு எதிரான கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட செய்திகள் உள்ளடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் சுதந்திர சதுக்கத்திலிருந்து கொழும்பு மாநகர சபை வரை விழிப்புணர்வு பேரணியொன்றும் இடம்பெற்றமை நிகழ்வின் முக்கிய அம்சமாகும்.
இந்த பேரணியின் ஊடாக ஒத்துழைப்பு அடையாளப்படுத்தப்பட்டதுடன் பாதுகாப்பான பொது இடத்திற்கான உடனடி தேவை தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டது.
அரசாங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், தனியார் பிரிவினர் மற்றும் சிவில் சமூகத்தினர் உள்ளிட்ட முக்கிய தரப்பினர் நிகழ்ச்சித் திட்டத்தின் இலக்குகள் தொடர்பில் அவர்களின் அர்ப்பணிப்பை மீள உறுதிப்படுத்தி GBV க்கு எதிரான குறைந்த சகிப்புத்தன்மை கொள்கையை கடைபிடிப்பதற்கான கூட்டு வாக்குறுதியை வழங்கினர். 16 நாட்கள் கொண்ட நிகழ்ச்சித் திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்பத்தை குறிக்கும் வகையில் கொழும்பு மாநகர சபை கட்டிடம் செம்மஞ்சல் நிறத்தில் ஒளியேற்றப்பட்டிருந்தது.
GBV முடிவுக்கு கொண்டு வருவதற்கான நாட்டின் அர்ப்பணிப்புக்களை உத்வேகத்துடன் நினைவூட்டும் வகையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் அரச பிரதிநிதிகள், அரச சார்பற்ற அமைப்புக்களின் உறுப்பினர்கள், இராஜதந்திரிகள், சிவில் சமூக செயற்ப்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.