கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்தது – சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் வைத்திய ஆலோசனையைப் பெறுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
காற்றின் தரச்சுட்டெண் குறியீடானது 50 சதவீதத்தை விடவும் குறைந்தளவிலேயே காணப்பட வேண்டும்.
எனினும், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் குறித்த அளவானது 120 மற்றும் 130ஆகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மத்திய மலைநாட்டின் ஹட்டன், பொகவந்தலாவ, மஸ்கெலியா, நோர்ட்டன் பிரிட்ஜ் மற்றும் கினிகத்தேன உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றின் தரமானது குறைவடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் தற்போது பனியுடனான வானிலை அதிகரித்துக் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காற்றின் தரமானது குறைவடைந்துள்ளதன் காரணமாகச் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் வைத்திய ஆலோசனையைப் பெறுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்