News

வீட்டினுள் பெறுமதியான புதையல் இருப்பதாக வர்த்தகர் ஒருவரை நம்ப வைத்து 2.9 மில்லியன் ரூபா பணத்தை கூலியாக பெற்றுச் சென்ற போலி ஜோதிடர் #இலங்கை

ஜோதிடர் ஒருவர், வீட்டு உரிமையாளருக்கு தெரியாமல், அவரது வீட்டுத் தோட்டத்தில் போலி இரத்தினக் கற்களை புதைத்து வைத்துவிட்டு, தோட்டத்தில் புதையல் இருப்பதாக உரிமையாளரை நம்பவைத்து, புதையலை எடுக்கும் சடங்குகளை மேற்கொண்டு, புதையல் தோண்டியதற்கான பகுதிக் கொடுப்பனவாக ரூ.2.9 மில்லியன் பணத்தை எடுத்துச் சென்றுள்ளார்.


அனுராதபுரம் விமான நிலைய வீதியைச் சேர்ந்த 70 வயதுடைய வர்த்தகர் ஒருவரே மோசடி ஜோதிடரிடம் சிக்கியுள்ளார்.

சந்தேக நபர் சடங்குகள் செய்து போலி இரத்தினக் கொத்தை தோண்டி எடுத்ததுடன், பாம்பாட்டியின் உதவியுடன், நாகப்பாம்பையும் அந்த வீட்டுக்குள் இரகசியமாக விட்டு, புதையலைக் காக்கும் ஆவி என்றும் அதைக் காயப்படுத்தக்கூடாது என்றும் வீட்டின் உரிமையாளரை நம்ப வைத்துள்ளார்.

சம்பவத்துக்கு முதல்நாள், வீட்டின் உரிமையாளர் தனது உழவு இயந்திரத்தை 2.9 மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளார். அந்தப் பணம், அவரது வீட்டிலேயே இருந்தது.

உழவு இயந்திரம் வாங்க வந்தவர்களில் ஒருவர், பின்னர் அந்த வர்த்தகரிடம் வந்து, தானொரு ஜோதிடர் என்றும், இந்த வீட்டுக்குள் நுழைந்த போது, வீட்டுத் தோட்டத்துக்குள் பெறுமதியான புதையலொன்று இருப்பதை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஜோதிடர் இரவு நேரம் அந்த வீட்டுக்குள் இரகசியமாக நுழைந்து, தோட்டத்தில் போலி இரத்தினக்கற்களை புதைத்துள்ளார்.

மறுநாள் வீட்டு உரிமையாளரை சந்தித்து, புதையல் தோண்டுவதற்கான ஏற்பாடுகளை செய்தார். பாம்பாட்டியொருவரின் மூலம் நாகபாம்பொன்றை, அந்த வீட்டு தோட்டத்துக்குள் இரகசியமாக விட்டுள்ளார்.  இரத்தினக்கல் தோண்டும் போது, தோட்டத்தில் பாம்பையும் அடையாளம் கண்டு, அந்தப் பாம்புதான், புதையலை காக்கும் ஆவியென குறிப்பிட்டுள்ளார்.

புதையல் தோண்டி, போலி இரத்தினக்கற்கள் மீட்கப்பட்டன. அவற்றின் பெறுமதி 40 மில்லியனுக்கும் அதிகமானது என கூறி ஏமாற்றி உள்ளார்.

இரத்தினக்கல் புதையல் கிடைத்ததில் வீட்டு உரிமையாளருக்கு தலைகால் புரியவில்லை. பெரும் மகிழ்ச்சியில் இருந்தார்.

புதையல் தோண்டியதற்காக தனது பங்காக 5 மில்லியனை ஜோதிடம் கேட்டார்.

மகிழ்ச்சியின் உச்சியிலிருந்த வீட்டு உரிமையாளர், உழவு இயந்திரத்தை விற்றதன் மூலம் தனக்குக் கிடைத்த 2.9 மில்லியன் ரூபாவை ஜோதிடரிடம் கொடுத்து, இரத்தினக் கற்களை விற்ற பின்னர் மீதித் தொகையை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

அநுராதபுரம் ருவன்வெலிசாயவிற்கு இரத்தினக் கற்களை எடுத்துச் சென்று ஆவிகளை மகிழ்விக்கும் வகையில் சமயச் சடங்குகளை மேற்கொள்ளுமாறும், அதுவரை வீட்டில் உள்ள விகாரைக்கு அருகில் இரத்தினக் கற்களை வைத்து வழிபடுமாறும் ஜோதிடர் அவருக்கு ஆலோசனை வழங்கினார். ஓரிரு நாட்களில் தான் திரும்பி வருவதாக உறுதியளித்திருந்தார்

இருப்பினும், ஜோதிடர் சொன்னபடி வராததால், வீட்டின் உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது. நகைக்கடைக்காரர் ஒருவரிடம் இரத்தினக் கற்களை எடுத்துச் சென்று  பரிசோதித்தபோது, அவை போலியானவை என்பது உறுதியாகியது.

ஒரு மோசடிக்காரனிடம் ஏமாந்து விட்டதாக வெட்கப்பட்ட வீட்டு உரிமையாளர், ஒரு கொள்ளையன் வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்து துப்பாக்கி முனையில் 2.9 மில்லியன் ரூபாயை எடுத்துச் சென்றதாக காவல்துறையில் பொய் புகார் அளித்துள்ளார்.

இருப்பினும், புகாரின் நம்பகத்தன்மையை சந்தேகித்த பொலிசார், வர்த்தகரிடம் மேலும் விசாரித்தபோது, அவர் இறுதியில் உண்மையை வெளிப்படுத்தினார்.

அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button