ஆசிய இளையோர் தடகளப் போட்டியில் பங்குபற்ற சென்ற இரு இலங்கை வீராங்கனைகள் போட்டிக்கு தாமதமாக சென்றாதால் போட்டியில் இருந்து இடை நிறுத்தப்பட்ட சம்பவம் பதிவு

2025 : இலங்கை வீராங்கனைகள் இருவர் தகுதி நீக்கம் – காலக்கெடுவை மீறிய காரணத்தால் பதக்கம் இழப்பு
சவூதி அரேபியாவில் நடைபெற்ற 2025 ஆசிய இளையோர் தடகளப் போட்டியில் இலங்கை வீராங்கனைகள் நிதுகி ப்ரார்த்தனா மற்றும் ஆயிஷா செவ்வாண்டி ஆகியோர் பெண்கள் U-18 1500 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்க தவறியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் போட்டிக்கான அறைகூவலுக்கு 35 நிமிடங்கள் முன்பாகவே அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், போட்டிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிர்வாகிகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் 6.10க்கு நிகழ்வுக்காக மாணவிகளை அழைத்து வர வேண்டிய நேரத்தில், 6.20க்கு தான் அழைத்து வந்துள்ளனர். இதனால், இருவரும் தாமதமாக வந்ததால் போட்டியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.
“நிகழ்வு 6.40க்கு இருந்தது. 6.10க்கே முதல் அழைப்புக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால் 6.20க்கு தான் அழைத்துச் சென்றனர். இந்த தவறுக்கு மேலாளர் ஒருவர், மூன்று பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் ஒரு பெண் அதிகாரி காரணமாக உள்ளனர். அவர்கள் தங்களுடைய மாணவர்களையே கவனிக்காமல் மற்றவர்களை புறக்கணித்துள்ளனர்,” என்று ஒரு பயிற்றுவிப்பாளர் தெரிவித்தார்.
இந்த இரு வீராங்கனைகளும் முறையே 4 நிமிடம் 41 விநாடிகள் மற்றும் 4 நிமிடம் 43 விநாடிகள் என்ற நேரத்துடன் ஓடக்கூடியவர்கள். ஆனால், இப்போட்டியில் வெற்றி பெற்ற சீன வீராங்கனை 4 நிமிடம் 58 விநாடிகளில் ஓடியதாக கூறப்படுகிறது. எனவே இலங்கைக்கு பதக்கங்கள் உறுதியானவை என பயிற்றுவிப்பாளர் தெரிவித்தார்.
இத்தகுதி நீக்கம் காரணமாக இலங்கை இரு மதிப்புமிக்க பதக்கங்களை இழந்துள்ளது. இந்த நிலையில், வீராங்கனைகளின் உறவினர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து இளைய வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



