News

பாரம்பரிய அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கப்பட்டு நாட்டை புதிய நிலைக்கு உயர்த்துவோம் – இனிமேல் பொது சொத்துக்களை திருடுவதற்கு பயப்பட வேண்டும் ; ஜனாதிபதி அனுரகுமார

**நாட்டை புதிய உயரத்திற்கு உயர்த்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் – ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க**

பாரம்பரிய அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்து, நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்த மாற்றத்தை நிலையானதாக வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். மேலும், நாட்டின் அனைத்து துறைகளையும் புதிய உயரத்திற்கு உயர்த்துவதற்கு இதேபோன்று செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும், முன்னைய அரசாங்கங்களின் தனித்தனி அதிகார மையங்களின் செயற்பாடுகளுக்கு தற்போதைய அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், பொது சொத்துக்களை திருடுவதற்கு சமூகமாக அஞ்ச வேண்டும் என்றும், அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டு செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஜனாதிபதி இந்த கருத்துக்களை, ‘Dream Destination’ திட்டத்தின் கீழ் 100 ரயில் நிலையங்களை புனரமைப்பு செய்யும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில், நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்தமைத்து உரையாற்றியபோது தெரிவித்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, ஒரு நாளைக்கு சராசரியாக எட்டு பேர் வாகன விபத்துக்களால் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துவதாக குறிப்பிட்டார்.

இதனால், வலுவான பாதை விதிமுறைகள் அவசியம் எனவும், பாதை நெரிசலை தவிர்ப்பதற்கும், விஷ வாயு உமிழ்வைக் குறைப்பதற்கும், சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கும், வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் செலவிடும் அதிகப்படியான செலவை குறைப்பதற்கும் பொது போக்குவரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதன்படி, இலங்கையின் பொது போக்குவரத்து அமைப்பை நவீன, வசதிகள் நிறைந்த, மற்றும் திறமையான சேவையாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக அரசாங்கத்தின் முதலீடுகளுக்கு மேலதிகமாக, தனியார் துறைக்கு முதலீட்டு வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், உலகளாவிய தரத்திற்கு ஏற்ப இலங்கையின் ரயில் நிலையங்களை புதிய அடையாளத்துடன் முத்திரை குத்துவதற்கு தனியார் துறையை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் இணைந்து, தனியார் துறையின் ஆதரவுடன், அரசு-தனியார் கூட்டு முயற்சியாக 100 ரயில் நிலையங்களை புனரமைப்பு செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நோக்கம், சிறப்புத் தேவைகள் உள்ளவர்கள் உட்பட அனைத்து பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதிப்படுத்தும், சுத்தமான மற்றும் அழகிய ரயில் நிலையங்களின் அமைப்பை உருவாக்குவதாகும். இந்நிகழ்வில், பாதை பாதுகாப்பு தொடர்பான செயற்பாட்டுத் திட்டத்தை அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம் ஒப்படைத்தார்.

இதன்போது உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பாதை நெரிசல் காரணமாக ஆண்டுதோறும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2%-3% வரை இழப்பு ஏற்படுவதாக தெரிவித்தார். 2012ஆம் ஆண்டு முதல் மக்கள் பெருமளவில் பொது போக்குவரத்தை விட்டு விலகி வருவதாகவும், எதிர்காலத்தில் எவ்வளவு பாதைகள் கட்டப்பட்டாலும் போக்குவரத்து பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படாது என்பதால், பொது போக்குவரத்தை வலுப்படுத்துவது இன்று அவசியமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button