ஈரானிய படைகள் குவைத்தில் உள்ள அமெரிக்க விமான தளம் மீது தாக்குதல்; பதற்றம் அதிகரிப்பு
தெற்கு ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) விமான நிலையத்திற்கு அருகில் அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, குவைத்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் மீது தாம் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.
ஈரானின் ‘தஸ்னிம்’ (Tasnim) செய்தி நிறுவனத்தின்படி, அமெரிக்கா பண்டார் அப்பாஸ் துறைமுக நகரின் விமான நிலையத்திற்கு அருகில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி சில மணித்தியாலங்களுக்குப் பின்னரே இந்த எதிர்த்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
“இந்தத் தாக்குதலானது எதிரிக்கு விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கையாகும். எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் உரிய பதில்டி கொடுக்கப்படும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது மீண்டும் நடந்தால், எங்களது பதில் இதைவிட தீர்க்கமானதாக இருக்கும்” என்று ஈரானிய பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. இருப்பினும், இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத் தரப்பு இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
அமெரிக்காவின் நிலைப்பாடு
இதற்கு முன்னதாக, ஹோர்முஸ் (Hormuz) நீரிணைக்கு அருகில் அச்சுறுத்தலாக வந்த 4 ஈரானிய ட்ரோன் (ஆளில்லா) விமானங்களை அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். மேலும், 5ஆவது ட்ரோன் விமானத்தை ஏவுவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த பண்டார் அப்பாஸில் உள்ள ஈரானிய தரைக்கட்டுப்பாட்டு மையம் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருந்தது.
பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி தெரிவிக்கையில், “இந்த நடவடிக்கைகள் முற்றிலும் தற்காப்புக்காக எடுக்கப்பட்டவை ஆகும், போர் நிறுத்தத்தைப் பேணுவதே இதன் நோக்கமாகும்” என்றார்.
இருப்பினும், ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் வெடிகுண்டுகளை பொருத்த முயன்றதாகக் கூறப்படும் ஈரானிய படகுகளை இலக்கு வைத்து அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) அண்மையில் தெற்கு ஈரானில் நடத்திய தொடர் தாக்குதல்களை, போர் நிறுத்தத்தை கடுமையாக மீறும் செயல் என ஈரான் கண்டித்திருந்தது.
டொனால்ட் ட்ரம்பின் கருத்து மற்றும் போர் நிறுத்தப் பின்னணி
ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இதற்கு முன்னர் கருத்துத் தெரிவிக்கையில், “தற்போதுள்ள சூழ்நிலை குறித்து நான் திருப்தியடையவில்லை. ஆனால் நாங்கள் ஒரு உடன்பாட்டை எட்டுவோம். இல்லையெனில், இந்த வேலையை நாங்கள் முழுமையாக முடிக்க வேண்டியிருக்கும்” என்று கூறியிருந்தார்.
• பெப்ரவரி 28 தாக்குதல்: கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்திய எதிர்பாராத தாக்குதலைத் தொடர்ந்து பிராந்திய பதற்றம் அதிகரித்தது. அதற்குப் பதிலடியாக ஈரானும் தொடர்ச்சியான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி ஹோர்முஸ் நீரிணையை மூட நடவடிக்கை எடுத்தது.
• பாகிஸ்தானின் சமரசம்: பின்னர், பாகிஸ்தானின் தலையீட்டுடன் ஏப்ரல் 8ஆம் திகதி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பினரும் நிரந்தர அமைதி உடன்பாட்டை எட்டத் தவறினர்.
• தற்போதைய நிலை: அதிபர் ட்ரம்ப் போர் நிறுத்தத்தை காலவரையறையின்றி நீடித்த போதிலும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கடல் பகுதி வழியாக ஈரானிய துறைமுகங்களை நோக்கிச் செல்லும் கப்பல்களுக்கான தடைகள் தொடர்ந்து அமலில் உள்ளன.



