“தேசிய மக்கள் சக்தி (மாலிமாவ) அரசாங்கம் இருப்பதால்தான் நாடு இந்த அளவிலாவது இருக்கிறது.”

நாட்டின் வரலாற்றில் காணப்பட்ட மிக மோசமான நெருக்கடிகள் மற்றும் உலக அரசியல் ஸ்திரமற்ற தன்மைக்கு மத்தியிலும், நாட்டை இன்றைய நிலையிலாவது முன்னெடுத்துச் செல்ல முடிந்துள்ளமை தற்போதைய அரசாங்கத்தின் சரியான தலையீடு காரணமாகவே என அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கங்களினால் தீர்க்கப்படாத மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட பல பிரச்சினைகளுடனேயே தாம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்றதாகவும், கடந்த ஒன்றரை ஆண்டு கால குறுகிய காலப்பகுதியில் நாட்டை கட்டியெழுப்புவதற்கு பாரிய சவால்கள் பலவற்றுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக, உலக சந்தையில் எரிபொருள், எரிவாயு மற்றும் உரங்களின் விலைகள் அதிகரித்தமை நாட்டின் பொருளாதாரத்தில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்தப் பிரச்சினைகள் அனைத்திற்கும் முகங்கொடுத்தும், நாடு இந்த அளவிலாவது இருப்பதற்கு இந்த அரசாங்கம் இருப்பதே காரணமாகும். இல்லையெனில் எவ்வாறான நிலை ஏற்பட்டிருக்கும் என்பதைப் பார்த்திருக்க முடியும்” என அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகக் குழுவினரை ஒடுக்கியதன் காரணமாக, அவர்களுடன் தொடர்புடைய அரசியல் குழுக்கள் கலக்கமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
சட்டத்தை நிலைநாட்டுவதில் அந்தஸ்து பார்க்கப்பட மாட்டாது எனவும், முன்னாள் ஜனாதிபதிகள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் தவறிழைத்திருந்தால் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அரசாங்கம் தயங்காது எனவும் அவர் கூறினார்.
நாட்டை சுத்தப்படுத்திவிட்டு, மீண்டும் திருடுவதற்கோ அல்லது மோசடி செய்வதற்கோ இடமளிக்கப் போவதில்லை எனக் குறிப்பிட்ட திரு. வித்யாரத்ன, அபிவிருத்திப் பணிகளுக்காக செலவிடப்படுவது ஆட்சியாளர்களின் பணம் அல்ல, மாறாக பொதுமக்களின் பணம் என்பதால், அவற்றை முறையான மற்றும் தரமான முறையில் பயன்படுத்துவதற்கு அரசாங்கமும் விவசாய அமைப்புகளும் தீவிர கண்காணிப்புடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.



