நான் கசிப்பு, பீடி குடிக்கிறேன் என்று கூறுபவர்கள் நாகரிகமற்றவர்கள்.. தாய்ப்பால் குடித்த பிறகு கசிப்பு, பீடியை வாயில் கூட வைத்ததில்லை..

தனது வாழ்நாளில் ஒரு நாளும் மது அல்லது புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தியதில்லை என்றும், தனக்கு எதிராக சுமத்தப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தான் நிராகரிப்பதாகவும் வீட்டுவசதி, கட்டுமான மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் (T.B. Sarath) தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தான் மது அருந்துவதாக எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிலர் வெளியிட்ட கருத்துக்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் மேலும் கூறியதாவது:
“நான் என் வாழ்க்கையில் எங்கும் மது அருந்தியது கிடையாது. என் அம்மா பால் கொடுத்த பிறகு, நான் இதுவரை ஒரு சிகரெட் கூட குடித்ததில்லை. என் வாழ்க்கையில் நான் பீடி குடித்ததும் இல்லை, கசிப்பு (கள்ளச்சாராயம்) அருந்தியதும் இல்லை. நேற்று ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியைச் சேர்ந்தவர்கள் மெதிரிகிரிய பகுதியில் நான் கசிப்பு குடித்ததாகக் குற்றம் சாட்டியிருந்தார்கள். இதுதான் இந்த நாட்டில் உள்ள நாகரிகமற்ற அரசியல் கலாசாரத்தின் தன்மையாகும்.”
அரசியல் கருத்துக்களை விமர்சிப்பதற்கு எவருக்கும் உரிமை உண்டு, ஆனால் ஒரு நபரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தனிப்பட்ட முறையில் சேறு பூசுவது ஒரு கீழ்த்தரமான செயலாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய செயல்களால் சமூகம் சீரழியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த டி.பி. சரத், தற்போதைய ஜனாதிபதி ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ள அறிவுரைகளையும் நினைவு கூர்ந்தார்.
“நாடாளுமன்றத்திற்குள் எந்த வகையான தூண்டுதல்களோ அல்லது கலவரங்களோ ஏற்பட்டாலும், தங்களது ஆசனங்களை விட்டு எழுந்து சென்று போராட்ட வடிவில் நடந்துகொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதி எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அந்த ஒழுக்கமான அரசியலை நாங்கள் எதிர்காலத்திலும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்” என்றும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

