தற்போது துறைமுகத்தில் இறக்கும் போது டீசல் 235 ரூபா.. பெற்றோல் 220 ரூபா…

உலக சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்துள்ள பின்னணியில், எவ்வித வரிகளும் விதிக்கப்படாமல் ஒரு லீட்டர் பெற்றோலை 220 ரூபாவிற்கும், ஒரு லீட்டர் டீசலை 235 ரூபாவிற்கும் கொழும்பு துறைமுகத்தில் இறக்க முடியும் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், அவ்வாறு வழங்க முடியாவிட்டால், 400 ரூபாவிற்கும் அதிகமான விலைகளில் தொடர்ந்து எரிபொருட்களை விற்பனை செய்யும் வில சூத்திரத்தை நாட்டிற்கு வெளிப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 08ஆம் திகதிக்குப் பின்னர் உலக சந்தையில் எரிபொருள் விலையில் பெரியளவில் அதிகரிப்பு எதுவும் ஏற்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய ரணவக்க, யுத்தம் ஆரம்பமான தருணத்தில் பழைய கையிருப்புகளுக்கும் உடனடியாக விலையை உயர்த்திய அரசாங்கம், தற்போது உலக சந்தையில் விலை குறைந்த போதிலும் உள்நாட்டில் விலையைக் குறைக்கத் தயக்கம் காட்டுவதாகக் குற்றம் சாட்டினார்.
“டிராஃபிகுரா (Trafigura) நிறுவனத்திற்கு ஒரு லீட்டர் டீசலுக்கு 98 ரூபா அதிகமாகச் செலுத்தப்பட்டுள்ளது. மற்றுமொரு நிறுவனத்திற்கு 120 ரூபா அதிகமாகச் செலுத்தப்பட்டுள்ளது. இவை பாரியளவிலான ஊழல்களாகும். இவற்றை மூடிமறைப்பதற்காக அரசாங்கம் தற்போது மக்களிடம் பழிவாங்கி வருகிறது” என அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் தோல்விகளை விமர்சிப்பவர்களை ஒடுக்குவதற்கும், அவர்களை சிறையில் அடைப்பதற்கும் அரசாங்கம் முயற்சி செய்தாலும், அதற்குத் தான் அஞ்சப்போவதில்லை என முன்னாள் அமைச்சர் வலியுறுத்தினார். தேசிய மக்கள் சக்தியை இலக்கு வைத்து கருத்துத் தெரிவித்த அவர், மக்கள் 50 வருடங்களுக்கு முன்பே நிராகரித்த ‘அரிசிப் புத்தகம்’ அல்லது ‘பங்கீட்டு முறைமை’ போன்ற பழைய வழிமுறைகளின் ஊடாக நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்றும் கூறினார்.
அரசாங்கம் தனக்கு ஒரு சட்டத்தையும், எதிர்க்கட்சிக்கு மற்றொரு சட்டத்தையும் நடைமுறைப்படுத்தி வருவதாகவும், நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களை மேலும் ஏமாற்றாது தகுந்த நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்தார்.

