இதுவா சிஸ்டம் சேஞ்ச்? குறைந்தது 25 பேரின் உயிர்களைப் பலிகொண்ட நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவத்திற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் ; சஜித் தெரிவிப்பு
குறைந்தது 25 பேரின் உயிர்களைப் பலிகொண்ட நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவத்திற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட பிரேமதாச, சிறைச்சாலை நிர்வாகத்தின் வீழ்ச்சி மற்றும் திறமையின்மை காரணமாகவே இந்த உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி முன்னர் எதிர்க்கட்சியில் இருந்தபோது, சிறைச்சாலைகளுக்குள் மரணங்கள் ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியிருந்ததை நினைவூட்டிய அவர், அதே கொள்கை தற்போதைய நிர்வாகத்திற்கும் பொருந்தும் என்றார்.
அரசாங்கம் உறுதியளித்த (சிஸ்டம் சேஞ்ச்) தோல்வியடைந்துள்ளதாக மேலும் சுட்டிக்காட்டிய பிரேமதாச, நீர்கொழும்பு சிறைச்சாலைச் சம்பவமானது ஆட்சிமுறை, சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலை நிர்வாகம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக வாதாடினார்.
அரசாங்கத்தினால் சட்டம் ஒழுங்கைப் பேணவும், மனிதநேயமிக்க சிறைச்சாலை நிர்வாகத்தை உறுதிப்படுத்தவும் முடியுமா எனக் கேள்வி எழுப்பிய அவர், பொதுமக்களுக்கு இதற்குரிய பதில்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
இச்சம்பவம் குறித்து சுயாதீனமான, நடுநிலையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கத்திற்கு சாதகமான அறிக்கையை தயாரிப்பதற்காக நியமிக்கப்படும் குழுவொன்றினால் இந்த விசாரணை நடத்தப்படக் கூடாது என்றார்.
அரசாங்கம் தனது அகந்தையைக் கைவிட்டு, தேசிய பாதுகாப்பு மற்றும் சிறைச்சாலை நிர்வாகம் உள்ளிட்ட நாட்டின் அழுத்தமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



