நியூசிலாந்தில் வயதான பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக இலங்கை நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை – தண்டனையின்
பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தவும் உத்தரவு
நியூசிலாந்தில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில், வயதான பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காகவும், மற்றுமொரு அங்கத்தவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காகவும் இலங்கை
பராமரிப்பாளர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நிலுஷான் ஜயங்க சில்வா கின்தொட விதானகே (Nilushan Jayanga Silva Ginthota Vidhanage) என அடையாளம் காணப்பட்ட இந்த நபருக்கு, கடந்த மே மாதம் கிறைஸ்ட்சர்ச் மாவட்ட நீதிமன்றத்தினால் (Christchurch District Court) இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த அவரது அடையாளத்தை வெளியிடுவதற்கான தடை உத்தரவு திங்கட்கிழமை நீக்கப்பட்டதை அடுத்து, அவரது விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டன.
ரேடியோ நியூசிலாந்து (RNZ) ஊடகத்தின்படி, விதானகே தான் பணிபுரிந்த பராமரிப்பு நிலையத்தில் இருந்த இரண்டு வயதான பெண்களுக்கு எதிராக ஒரு பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு மற்றும் இரண்டு சட்டவிரோத பாலியல் தொடர்பு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்டார்.
எனினும், அந்த பராமரிப்பு நிலையத்தின் பெயர் நீதிமன்ற உத்தரவின்படி நிரந்தரமாக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
தண்டனைத் தீர்ப்பின் போது, நீதிபதி ஜேன் ஃபரிஷ் (Judge Jane Farish), பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உடல் மற்றும் மன நிலைமைகள் காரணமாக மிகவும் பலவீனமானவர்களாக இருந்ததாக விவரித்ததுடன், அவர்களின் நலனைக் கவனிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஒரு பராமரிப்பாளரால் மேற்கொள்ளப்பட்ட இந்த குற்றங்கள், நம்பிக்கையை கடுமையாக மீறும் செயல் என்று கூறினார்.
விதானகே 11 வயது சிறுமி ஒருவரை அணுகி, தனது காரை நிறுத்தி, அவளுக்கு சிகரெட் மற்றும் காரில் ஏறுமாறு அழைப்பு விடுத்து மிரட்டிய குற்றச்சாட்டையும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அச்சிறுமி அந்த இடத்திலிருந்து தப்பி ஓடி, காரின் பதிவு எண்ணைக் குறித்துக்கொண்டு தனது தாயிடம் சம்பவம் குறித்துப் புகாரளித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
விதானகே எந்தவொரு வருத்தத்தையும் வெளிப்படுத்தவில்லை என்றும், பாலியல் குற்றங்களை தொடர்ந்து மறுத்து வருவதாகவும் நீதிபதி ஃபரிஷ் குறிப்பிட்டார். மேலும், அவர் தனது தண்டனைக் காலத்தில் மூன்றில் ஒரு பகுதியை அனுபவித்த பின்னர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
இந்த பராமரிப்பு நிலையத்துடன் தொடர்புடைய வேறு யாரும் இதனால் பாதிக்கப்படவில்லை என நம்புவதாக நியூசிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ள போதிலும், இது தொடர்பான ஏதேனும் தகவல்கள் இருந்தால் முன்வருமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.



