நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்திற்கு நானே பொறுப்பேற்க வேண்டும் – இது எவரையும் குற்றம் சாட்டுவது குறித்த விடயமல்ல ; நீதி அமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் 25 பேர் உயிரிழந்தமை குறித்து நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அதிர்ச்சியும் கவலையும் வெளியிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர்,
தனது அமைச்சின் கீழ் உள்ள ஒரு நிறுவனத்திலேயே இந்த அமைதியின்மை ஏற்பட்டதாகவும், எனவே இந்த நிலைமைக்குத் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், எந்தவொரு உயிர் இழப்பும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
“உயிரிழப்புகள் குறித்து ஆழ்ந்த அதிர்ச்சி அடைகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, அங்கு என்ன நடந்தது என்பதை மதிப்பீடு செய்து, இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்வோம். இது எவரையும் குற்றம் சாட்டுவது குறித்த விடயமல்ல” என்று அவர் கூறினார்



