News

ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு விதிக்கப்பட்டுள்ள மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை என்ன ஆகும்? விரைவில் விசாரணை – நீதிமன்றம் இன்று உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர தனக்கு விதிக்கப்பட்டுள்ள மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை மற்றும் அபராதத்தை ரத்து செய்து, தன்னை நிரபராதி என விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டது.


இந்த மனு பி. குமாரன் ரத்தினம் மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் ஆஜரான சட்டத்தரணி, அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ ஆஜராகவுள்ளதால், மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக ஒரு திகதியை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரினார்.


இதேவேளை, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, இந்த மேன்முறையீட்டு மனுவை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக குறுகிய காலத்திற்குள் ஒரு திகதியை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரினார்.
முன்வைக்கப்பட்ட காரணங்களை கருத்திற்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், மனுவை ஆகஸ்ட் 6ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவிட்டது.


2015 டிசம்பர் 21ஆம் திகதி தெமட்டகொட பகுதியில் உள்ள கடையொன்றில் பணிபுரிந்த அமில பிரியங்க அமரசிங்க என்ற இளைஞனை டிஃபென்டர் வாகனத்தில் கடத்திச் சென்று, சட்டவிரோதமாக சிறைப்பிடித்து தாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் 2024 ஜூன் 28ஆம் திகதி மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனையும் 20,000 ரூபா அபராதமும் விதித்திருந்தது.
அந்தத் தீர்ப்பையும் தண்டனையையும் ரத்து செய்து, தன்னை நிரபராதி என விடுதலை செய்யுமாறு கோரியே ஹிருணிகா பிரேமச்சந்திர இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button