நான் பேஸ்புக் பக்கமே போவதில்லை… முட்டாள்கள் தான் அங்கு இருக்கிறார்கள் – புத்திசாலிகள் போராடும் களம் அது அல்ல ; தயாசிறி
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர, தான் ஃபேஸ்புக் (Facebook) சமூக வலைத்தளத்திலிருந்து விலகியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“நான் ஃபேஸ்புக் பக்கமே போவதில்லை, ஏனென்றால் அதற்குள் இருப்பது ஒரு சில முட்டாள்கள் தான். அது புத்திசாலிகள் போராடும் களம் அல்ல. எனவே, நான் அங்கு சென்று பார்ப்பதில்லை. எமது கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள அனைவரையும் ஒன்றிணைத்து அதற்குள் போட முடியும். அப்படிப் போட்ட பிறகு அவர் எவ்வாறு முத்திரை குத்தப்படுவார்… அவர் ஒரு திருடன், அவர் ஒரு கொள்ளைக்காரன், அவர் ஒரு போதைப்பொருள் வியாபாரி… இப்பொழுது அவர்கள் எல்லோரையும் போட்ட பிறகு நாங்கள் யாருடன் இணைந்து பணியாற்றுவது? எதிர்க்கட்சியாக நாங்கள் யாருடன் இணைந்து பணியாற்றுவது?”
நாடாளுமன்ற உறுப்பினரின் உத்தியோகபூர்வ ஃபேஸ்புக் பக்கம் கடைசியாக இற்றைப்படுத்தப்பட்டு (Update) 24 மணித்தியாலங்கள் கடப்பதற்கு முன்னரே அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



