கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானுக்கு எதிராக தொடர்ச்சியான சக்திவாய்ந்த தாக்குதல்களை நடத்தியது அமெரிக்கா

ஹார்முஸ் நீரிணையைக் கடக்கும் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானுக்கு எதிராக “தொடர்ச்சியான சக்திவாய்ந்த தாக்குதல்களை” தொடுக்கத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரானிய துறைமுக நகரமான சிரிக், பண்டார் அப்பாஸ் மற்றும் கெஷ்ம் தீவு ஆகியவற்றில் வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜூன் 17 அன்று கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் எண்ணெய் விற்க அனுமதித்த விலக்கு உரிமையை அமெரிக்கா ரத்து செய்த சிறிது நேரத்திலேயே இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
முன்னதாக, கத்தார் மற்றும் சவுதி அரேபிய எண்ணெய் டாங்கர்கள் உட்பட ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற மூன்று கப்பல்கள் தாக்கப்பட்டன.
ஈரானின் தெற்குத் துறைமுகமான சிரிக்கில் உள்ள ஒரு வணிகத் தளவமைப்பின் (commercial dock) மீது விழுந்த ” ஏவுகணையின்” சிதறல்கள் தாக்கியதில் பலர் காயமடைந்துள்ளதாக ஈரானின் ஐஆர்ஐபி (IRIB) அரசு ஊடகம் தெரிவிக்கிறது.
காயமடைந்தவர்கள் மினாப் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அது மேலும் கூறியுள்ளது.
ஈரானிய இலக்குகள் மீது “சக்திவாய்ந்த தாக்குதல்கள்” என்று அழைக்கப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (US Central Command) தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய ஈரானின் தவறான நடத்தைதான் இந்தத் தாக்குதல்களுக்குக் காரணம் என்று அது குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்கப் படைகள் தாக்கி வரும் இலக்குகளின் வகைகள் குறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், கடலோரக் கண்காணிப்பு அமைப்புகள், மேற்பரப்பில் இருந்து வான்நோக்கிப் பாயும் ஏவுகணைகள் (surface-to-air missiles), கப்பல் எதிர்ப்பு அதிவேக ஏவுகணைகள் (antiship cruise missiles) மற்றும் ட்ரோன் ஏவுதளங்கள் ஆகியவற்றை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார். நீரிணையின் பல்வேறு பகுதிகள் வழியாகச் செல்வதைக் கட்டுப்படுத்துவது யார் என்ற பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுடன் இந்த இலக்குகள் தொடர்புடையவை என்று அந்த அதிகாரி கூறினார்.
கப்பல்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு வழிகளைப் பயன்படுத்துமாறு ஈரான் முயன்று வருகிறது. அதே நேரத்தில், கப்பல்கள் தெற்கு வழியைப் பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதற்கிடையில், நீரிணையின் மையப்பகுதி வழியாகச் செல்லும் பாரம்பரிய வழித்தடத்தில் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதால், கப்பல்களால் அந்த வழியைப் பயன்படுத்த முடியாமல் உள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்த பேச்சுவார்த்தைகளில் இவை அனைத்தும் தீர்க்கப்பட வேண்டியவையாக இருந்தன.



