கல்முனை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபைகளின் ஆணையாளர் என்.எம். நெளபீஸுக்குக் கடமை நேரத்தில் உயிர் அ*ச்சுறுத்தல் விடுத்த மாநகர சபை ஊழியர் சிறையிலடைப்பு

பாறுக் ஷிஹான்
கல்முனை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபைகளின் ஆணையாளர் என்.எம். நெளபீஸுக்குக் கடமை நேரத்தில் உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்முனை மாநகர சபை ஊழியரை 02 சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.சாஜித் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை 02 சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், நீதிமன்ற வேலை நேரத்திற்குள் உரிய முறையில் பிணை எடுக்கத் தவறியமையினாலேயே அவர் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்முனை மாநகர சபைக்குள் வைத்து, அதன் ஆணையாளர் என்.எம். நெளபீஸை அதே சபையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கடமை நேரத்தில் அச்சுறுத்தியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஆணையாளரினால் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, சந்தேகநபரான ஊழியர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கானது கடந்த திங்கட்கிழமை (13) கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது நீதிமன்றில் முன்னிலையான இருதரப்புச் சமர்ப்பணங்களையும் நீதிவான் விரிவாக ஆராய்ந்தார்.
அதனைத் தொடர்ந்து, சந்தேகநபரை 02 சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கு நீதிவான் உத்தரவிட்டார். எனினும், நீதிமன்ற நேரம் முடிவடையும் வரை சந்தேகநபர் சார்பில் பிணை எடுப்பதற்கு எவரும் முன்வராத காரணத்தினால், அவர் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மேலும், இந்த வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாகவும் கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.



