News

தமிழ் பேசும் கூட்டு எதிரணி என்பது உள்ளே ஒன்றுமில்லாத வெங்காயம் – இவர்கள் மக்களின் நலத்துக்காக அன்றி எதிர்கால அரசியல் இருப்புப் பற்றிய பயம் மற்றும் பாராளுமன்றில் கிங் மேக்கர் பதவி இழப்பால் ஏற்பட்ட கூட்டணி மட்டுமே ;  ஜனகன்

“கூட்டு தமிழ் பேசும் எதிர்க்கட்சி என்பது, உரிக்க உரிக்கக் கண்ணீர் மட்டுமே வரவழைக்கும், உள்ளே ஒன்றுமில்லாத வெங்காயம் போன்றது. இது கொள்கையற்ற, சுயநலத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு நீர்க்குமிழி கூட்டணி” என்று கலாநிதி விநாயகமூர்த்தி ஜனகன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

திங்கட்கிழமை (13) அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னணி மற்றும் தமிழ், முஸ்லிம் கூட்டு எதிர்க்கட்சியின் அரசியல் சுயரூபம் குறித்து அவர் வெளியிட்டுள்ள முழுமையான ஊடக அறிக்கையின் சாராம்சம் வருமாறு:

கடந்த நாற்பது வருடங்களாக, முஸ்லிம் அரசியல் என்பது தன்னைத் தமிழ் அரசியலில் இருந்து இயல்பாகவே பிரித்துக்கொண்டது. தனி அடையாளம், தனி வாக்கு வங்கி, தனி பேரம் பேசும் சக்தி என்ற பாதையிலேயே அது பயணித்தது. குறிப்பாக, கிழக்கின் நிலப் பிரச்சினைகளிலும், வடக்கு-கிழக்கு இணைப்பு விவகாரத்திலும் இரு தரப்பும் எப்போதும் எதிர் எதிர் திசையில்தான் நின்றன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடிப்படை முரண்பாடுகளைத் தீர்க்காமல், இன்று திடீரென ‘கூட்டு தமிழ் பேசும் எதிர்க்கட்சி’ என்ற பெயரில் உதயமாகியிருக்கும் இவர்களை ஒன்று சேர்த்தது மக்களின் நலனோ அல்லது கொள்கையோ அல்ல. மாறாக, அவர்களின் அரசியல் இருப்புப் பற்றிய பயம், நாடாளுமன்றத்தில் ‘கிங்மேக்கர்’ (Kingmaker) என்ற தகுதியும் பதவியும் பறிபோய்விட்டதே என்ற கலக்கம் மற்றும் வாக்கு வங்கி கரைந்து போனதன் விளைவாக வந்த அச்சமே இதற்குக் காரணம் என அவர் சாடியுள்ளார்.

மக்களின் பிரச்சினைகளுக்காக அன்றி, தங்களின் நாற்காலியைக் காப்பாற்றிக்கொள்ளவே இந்தச் சுயநலக் கூட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ள அவர், “பரஸ்பர அக்கறையுள்ள விடயங்களில் இணைந்து செயற்படுவதான உடன்படிக்கை” என்ற ஒரேயொரு வெற்று வாசகத்தை மட்டுமே அவர்களால் முன்வைக்க முடிந்திருக்கிறது. ஆனால், அந்த ‘பரஸ்பர அக்கறையுள்ள விடயங்கள்’ எவை என்பதற்கான எந்தவொரு பட்டியலோ, பொது வேலைத்திட்டமோ அல்லது கொள்கை ஆவணமோ அவர்களிடம் இல்லை. கிழக்கின் எதிர்காலம் அல்லது நிலப் பிரச்சினை பற்றி ஒரு வரிகூட அவர்கள் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுதான் இந்த வெங்காயக் கூட்டணியின் உரிக்கப்பட்ட முதல் தோல் எனக் குறிப்பிட்ட கலாநிதி விநாயகமூர்த்தி ஜனகன், கொள்கையற்ற இந்தக் கூட்டணி வெங்காயம் மட்டுமல்ல, அது ஒரு நீர்க்குமிழி என்றும், வரவிருக்கும் முதல் தேர்தல் ஆசனப் பங்கீட்டிலேயே இந்த உடன்பாடு உடைந்து சிதறிவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அரசியல் எதிர்காலம், தற்போது தேசியக் கட்சிகளின் வியூகங்களாலும் பிராந்தியக் கட்சிகளின் தடுமாற்றங்களாலும் சிதைந்து வருகிறது. எந்த நோக்கங்களுக்காக இந்தக் கட்சிகள் உருவாக்கப்பட்டனவோ, அந்த நோக்கங்களைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, தலைவர்கள் தங்களை மட்டுமே பாதுகாத்துக்கொள்ளத் துடிக்கிறார்கள். மறுபுறம், ஆளும் கட்சி தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்பினரைத் தனது ஆளுமைக்குள் இணைத்துக்கொண்டு அரசியல் செய்தாலும், அந்த இணைப்பிலும் மக்களின் உண்மையான விடிவோ எதிர்காலமோ இன்னும் எட்டப்படவில்லை. சுருக்கமாகக் கூறின், எதிர்க்கட்சியிலும் விடை இல்லை; ஆளும் தரப்பிலும் தீர்வு முழுமையடையவில்லை” என்று விளக்கியுள்ளார்.

“தமிழ் பேசும் மக்களுக்கு இப்போது தேவை அழுகை வரவைக்கும் வெங்காயங்கள் அல்ல; அவர்களின் பசியைத் தீர்க்கும் உன்னத அரசியலே ஆகும். தலைமைகளின் இந்த அரசியல் சூழ்ச்சிகளுக்கு மத்தியில், தற்போதைய ஒரே நம்பிக்கை இளைஞர்கள் மட்டுமே. சமூக-பொருளாதாரப் புரிதல்களையும் அரசியல் அறிவையும் இளைஞர்கள் வேகமாக வளர்த்துக்கொள்ள வேண்டும். தழையாட்டும் சுயநல அரசியலை விடுத்து, புதிய அரசியல் பார்வையுடன் தங்களைத் தயார்படுத்த வேண்டும். இல்லையென்றால், தடுமாறும் தற்போதைய தலைவர்களின் அரசியல் சூழ்ச்சிகளுக்குள் இன்னும் ஒரு தலைமுறை சிக்கி அழிய நேரிடும். வெங்காயத்தின் அடுத்த தோல் எப்போது உரியும் என்று மக்கள் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். மக்களின் ஏமாற்றங்களுக்குக் காலம் விரைவில் பதில் சொல்லும்” என்று தனது அறிக்கையில் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button