ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா இதுவரை சுமார் 3,750 கோடி டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 10 இலட்சம் கோடி) செலவிட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிவிப்பு

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா இதுவரை சுமார் 3,750 கோடி டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 10 இலட்சம் கோடி) செலவிட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராணுவத் தேவைகள் மற்றும் வெள்ளை மாளிகையின் செலவுகளுக்காக 9,500 கோடி டொலர் மதிப்பிலான பட்ஜெட் தொகுப்பை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சியினர் தயார் செய்து வருகின்றனர். அமெரிக்க செனட் சபையின் நிதி ஒதுக்கீட்டுக் குழு முன் ஆஜரான பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத், இந்த அவசரகால நிதி ஒதுக்கப்பட்டால்தான் இராணுவத்தின் கடுமையான நிதி நெருக்கடியைத் தவிர்க்க முடியும் எனக் கூறினார்.
அமைதி ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் கூறிவந்த நிலையில், மீண்டும் 7,000 கோடி டொலர் கூடுதல் நிதி கேட்பது நியாயமற்றது என்று எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் மூத்த செனட்டர் பேட்டி முர்ரே குற்றம்சாட்டினார்.
ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து 11ஆவது நாளாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
கடந்த 11 நாட்களில் அமெரிக்கத் தாக்குதலால் 53 பேர் உயிரிழந்துள்ளனர் 600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ஈரானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக ஜோர்டான், பஹ்ரைன், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் மீது ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


