News

இரத்தப் பரிசோதனை (FBC) ஒன்றுக்கான அதிகபட்ச கட்டணமான 400 ரூபாய்க்கு பதிலாக 550 ரூபாய் அறவிட்ட யாழ் தனியார் வைத்திய ஆய்வுகூடமொன்றுக்கு 30 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்படும் சில வைத்திய பரிசோதனைகளுக்கான அதிகபட்சக் கட்டணங்களை மீறி கட்டணம் அறவிட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தனியார் வைத்திய ஆய்வுகூடமொன்றுக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் 30 இலட்சம் ரூபாய் (3 மில்லியன் ரூபாய்) அபராதம் விதித்துள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்சக் கட்டணத்தின்படி, முழுமையான இரத்தப் பரிசோதனை (FBC) ஒன்றுக்கான அதிகபட்ச கட்டணம் 400 ரூபாய் ஆகும். எனினும், யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் இயங்கும் குறித்த தனியார் நிறுவனம் இதற்காக 550 ரூபாய் அறவிட்டது விசேட சுற்றிவளைப்பின்போது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. விசாரணையின்போது பிரதிவாதி நிறுவனம் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் 3 மில்லியன் ரூபாய் அபராதம் விதித்ததுடன், நிறுவனத்தின் சொந்தச் செலவில் பிரதான நாளிதழ்களில் மன்னிப்பு அறிவிப்பை வெளியிடவும் உத்தரவிட்டுள்ளது.

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய ஆய்வுகூடங்களில் சேவைகளைப் பெறும் பொதுமக்கள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், பணம் செலுத்தும் ஒவ்வொரு முறையும் உரிய பற்றுசீட்டை பெற்றுக்கொள்வது நுகர்வோர் உரிமை என்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் அறவிடப்படும் சம்பவங்கள் தொடர்பில், அலுவலக நேரங்களில் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்யுமாறும் அதிகாரசபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button