“நிதி அமைச்சு கூறுவது பொய்..” இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள பரபரப்பான அறிக்கை…

ஆஸ்திரேலிய கடன் வழங்கும் நிறுவனமான ‘Export Finance Australia’ நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் (USD 2,489,441) வெளிநாட்டுக் கடன் தவணைப் பணம் மோசடியான கணக்குகளுக்கு அனுப்பப்பட்ட சம்பவம் தொடர்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு சமர்ப்பித்த அறிக்கையில் அடங்கியுள்ள தவறான மற்றும் அரைகுறையான தகவல்களைத் திருத்தி, இலங்கை மத்திய வங்கி (CBSL) அரசாங்க நிதிகள் பற்றிய பாராளுமன்றக் குழுவிடம் (COPF) சிறப்பு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.
நிதி அமைச்சின் மின்னஞ்சல் தொகுதிக்கு மேற்கொள்ளப்பட்ட சைப்ரர் தாக்குதல் மூலம் தயாரிக்கப்பட்ட போலி கொடுப்பனவு அறிவுறுத்தல்களே, குறித்த பணம் மோசடி செய்பவர்களின் கணக்குகளுக்கு மாறுவதற்கு முதன்மையான காரணம் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
ஆஸ்திரேலிய கடன் வழங்கும் நிறுவனத்துடன் 2025 அக்டோபர் 27 அன்று புதிதாகக் கையொப்பமிடப்பட்ட கடன் ஒப்பந்தங்கள் நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்திடம் இருந்தபோதிலும், பெறப்பட்ட இன்வொய்ச்களில் (Invoices) குறிப்பிடப்பட்டிருந்த வங்கிச் கணக்கு விபரங்களை அந்த ஆரம்ப ஒப்பந்தங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து அவற்றின் துல்லியத்தை உறுதிப்படுத்த நிதி அமைச்சின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அரசாங்கத்தின் வங்கியாளராக மத்திய வங்கியின் பணத் திணைக்களம் செய்தது, நிதி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டு அனுப்பப்பட்ட கொடுப்பனவு அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்தியது மட்டுமே ஆகும்.
நிதி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட இன்வொய்ஸ் ஒன்றில், நிதியைப் பெறும் வங்கியின் விபரங்கள் வேறு மாநிலத்தில் உள்ள ஒரு வங்கியாகக் குறிப்பிடப்பட்டிருந்ததால், சர்வதேச பணச்சலவை எதிர்ப்பு (AML) சட்டப் பின்னணியின் கீழ் குறித்த கொடுப்பனவு தொடர்பாகப் பிரச்சினைகள் எழக்கூடும் என்று மத்திய வங்கியின் பணத் திணைக்களம் முன்னரே நிதி அமைச்சுக்கு அறிவித்திருந்தது. கடன் வழங்கியோரிடம் நேரடியாகவே சரியான கணக்கு விபரங்களை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்திய போதிலும், நிதி அமைச்சு நேரடி உறுதிப்படுத்தலை மேற்கொள்ளாமல் போலி ஆதாரத்தையே நம்பிச் செயல்பட்டுள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டுகிறது.
2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க அரசாங்க கடன் மேலாண்மைச் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட அரசாங்க கடன் மேலாண்மை அலுவலகத்திற்காக (PDMO) மத்திய வங்கியின் அரசாங்க கடன் திணைக்களம் (PDD) முழுமையான பயிற்சியளித்திருந்தது. இந்தப் பயிற்சிக்குப் பிறகு, 2025 அக்டோபர் 24 முதல் PDMO அதிகாரிகளே தங்களுடைய பயனாளர் கணக்குகளைப் பயன்படுத்தி NRM தொகுதியினுள் சுயாதீனமாக Standard Settlement Instructions (SSIs) தயாரித்தல் மற்றும் பரிவர்த்தனைகளை உள்ளீடு செய்தலை மேற்கொண்டுள்ளனர். எனவே, இந்தப் பரிவர்த்தனைகள் மத்திய வங்கியின் நேரடிக் கண்காணிப்பு அல்லது அங்கீகாரத்தின் கீழ் நடந்தவை என நிதி அமைச்சு கூறும் கூற்றுக்கள் பொய் என்பது மத்திய வங்கியின் கணினிப் பதிவுகள் (System Logs) மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் சேவைகளை நிறைவேற்றுவதில் அரசாங்க வங்கியாளராகத் தான் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் வலியுறுத்துகிறது. இந்த நிதி வேறு வழியில் திருப்பப்பட்ட சம்பவம் மத்திய வங்கியின் நடைமுறை, பயிற்சி அல்லது கணினிப் பிழையினால் ஏற்பட்டது அல்ல என்றும், நிதி அமைச்சின் உட்புறச் சரிபார்ப்பு நடைமுறையிலும் கட்டுப்பாட்டு அமைப்பிலும் காணப்பட்ட தீவிர வீழ்ச்சியினாலேயே ஏற்பட்டது என்றும் COPF குழுவின் முன்னிலையில் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய வங்கி தனது அறிக்கையின் மூலம் வலியுறுத்தும் முக்கிய புள்ளிகள் வருமாறு:
1. நிதி அமைச்சின் உட்புறக் கட்டுப்பாட்டு அமைப்பின் வீழ்ச்சி:
இந்த நிதி மோசடி நேரடியாக நடப்பதற்கு நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் மின்னஞ்சல் தொகுதி செயலிழந்தமையும், அதன் அதிகாரிகளின் தீவிர அலட்சியப்போக்குமே காரணம் என மத்திய வங்கி சுட்டிக்காட்டுகிறது. கொடுப்பனவு அறிவுறுத்தல்களை வெளியிடுவதற்கு முன்னர் அவற்றை மூல ஆவணங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க அமைச்சின் அதிகாரிகள் தவறியுள்ளதுடன், மோசடி செய்பவர்களால் அனுப்பப்பட்ட மாற்றியமைக்கப்பட்ட அறிவுறுத்தல்களைச் சரியானவை என நம்பி அவர்கள் செயற்பட்டுள்ளதாக மத்திய வங்கி குற்றம் சாட்டுகிறது.
2. மத்திய வங்கியின் கண்காணிப்பு குறித்த தவறான கூற்றுக்கள்:
குறித்த மோசடி நடந்த வேளையில் அரசாங்கக் கடன் மேலாண்மைப் பிரிவு மத்திய வங்கியின் கண்காணிப்பின் கீழ் இருந்ததாக நிதி அமைச்சு கூறிய கூற்றை மத்திய வங்கி முற்றாக நிராகரிக்கிறது. 2025 அக்டோபர் மாதம் முதல் அந்தப் பிரிவு நிதி அமைச்சின் கீழ் சுயாதீனமாக இயங்கியதாகவும், அதன் அனைத்துப் பரிவர்த்தனைகளும் அங்கீகாரங்களும் அமைச்சின் அதிகாரிகளாலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும் மத்திய வங்கி கூறுகிறது. அதற்குத் தேவையான பயிற்சி மற்றும் தொழில்நுட்ப உதவியை மத்திய வங்கி ஏற்கனவே வழங்கியிருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
3. எச்சரிக்கைகளைப் புறக்கணித்தல்:
இந்தப் பரிவர்த்தனையின் போது பணம் பெறுபவரின் முகவரிகள் மாறியது குறித்து மத்திய வங்கி அதிகாரிகள் நிதி அமைச்சிடம் சந்தேகங்களை எழுப்பியிருந்தபோதிலும், அமைச்சு அதனைத் தீவிரமாகக் கவனத்தில் கொள்ளவில்லை…



