News

வலுவான வரி வசூலிப்பு இடம்பெற்று, அரசாங்கத்தின் வருமானச் செயல்திறன் இலக்குகளைத் தாண்டியுள்ளதால் மேலதிக வரிகள் அவசியமில்லை – எரிபொருள் வரிகளையும் நீக்க நடவடிக்கை ; பிரதி அமைச்சர்

சர்வதேச நாணய நிதியம் (IMF) இரண்டு மேலதிக வரிகளை அறிமுகப்படுத்த முன்மொழிந்ததாகவும், ஆனால் அரசாங்கத்தின் வருமானச் செயல்திறன் இலக்குகளைத் தாண்டியுள்ளதால் அவை தற்போது அவசியமில்லை என்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.


ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அபேசிங்க, வலுவான வரி வசூலிப்பு மேலும் வரி நடவடிக்கைகளுக்கான தேவையை குறைத்துள்ளதாகக் குறிப்பிட்டதுடன், இது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் கூறினார்.


“இதற்கு முன்னர் வரி செலுத்தாதவர்களிடம் இருந்தும் நாங்கள் தற்போது வரிகளை வசூலித்து வருகிறோம், மேலும் எங்கள் வருமான இலக்குகளையும் தாண்டியுள்ளோம். சர்வதேச நாணய நிதியம் இரண்டு மேலதிக வரிகளை முன்மொழிந்துள்ளது, ஆனால் எங்களது வருமானம் சிறப்பாக இருப்பதால் இந்த வரிகள் அவசியமில்லை என்று நாணய நிதியத்துடன் நாங்கள் கலந்துரையாடி வருகிறோம்,” என்று அவர் கூறினார்.


வரி வரம்பை விரிவாக்குவதன் மூலம், அடுத்த ஆண்டு குறிப்பிட்ட வரி விகிதங்களை, குறிப்பாக மறைமுக வரிகளைக் குறைக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அபேசிங்க மேலும் தெரிவித்தார்.
எரிபொருள் வரிகள் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், இலங்கை கனிமநெய் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் இலங்கை மின்சார சபை (CEB) ஆகியன தங்களின் நிலுவைக் கடன்களை செலுத்தி முடித்தவுடன், எரிபொருள் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகக் கூறினார்.


மேலும், வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார, கல்வி மற்றும் பொதுப் போக்குவரத்தில் முதலீட்டை அதிகரிப்பதுடன், நாட்டின் வரிப் கொள்கையில் சாத்தியமான மாற்றங்களுடன், வாழ்க்கைச் செலவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button