இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 19 நிலக்கரி கப்பல்களும் தரமற்றவை..- ஆஸ்திரேலிய ஆய்வகமும் அறிக்கை சமர்ப்பிப்பு…

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 19 நிலக்கரி கப்பல்களும் தரமற்றவை என்றும், இதன் காரணமாக நாட்டுக்கு 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனை வெளிப்படுத்தினார்.
லக்விஜய மின்நிலையத்தினால் வழங்கப்பட்ட அறிக்கைகள் மூலம் இந்த நிலக்கரி தரமற்றது என முதன்முதலில் வெளிப்படுத்தப்பட்ட போதிலும், அரசாங்கத்தின் சில தரப்பினர் அதனை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
பின்னர், ஆஸ்திரேலியாவின் ‘பியூரோ வெரிடாஸ் இன்டர்நேஷனல்’ (Bureau Veritas International) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட மூன்றாம் தரப்பு சோதனையிலும் குறித்த 19 நிலக்கரி கப்பல்களும் தரமற்றவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த தரமற்ற நிலக்கரியைப் பயன்படுத்தியமையினால் மின் உற்பத்தியில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக டீசல் மற்றும் ஃபர்னஸ் எண்ணெயை (Furnace oil) கொள்முதல் செய்ய அரசாங்கத்திற்கு நேரிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, ஜனவரி 01 முதல் ஜூன் 30 வரையிலான காலத்தில் மட்டும் 8,536 மில்லியன் ரூபாய் கூடுதல் செலவீனத்தை ஏற்க வேண்டியிருந்ததாகவும், வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி வரை இந்த தரமற்ற நிலக்கரியைப் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளதால், மொத்த இழப்பு 10,000 மில்லியன் ரூபாயைக் கடக்கும் என்றும் மரிக்கார் சுட்டிக்காட்டினார்.
மின் கட்டணம் இருமுறை உயர்த்தப்பட்டதற்கு இவ்வாறான முறைகேடுகளே நேரடியாகக் காரணம் எனக் குற்றம் சாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், இது தொடர்பான ஆவணங்களையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அரசாங்கம் கூறும் ‘சிஸ்டம் சேஞ்ச்’ (அமைப்பில் மாற்றம்) என்பதன் உண்மையான வடிவம் இதுதானா என்றும் அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.



