News

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ADB) இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் கடன்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடி நிலைமை காரணமாக இலங்கைக்கு ஏற்படக்கூடிய பொருளாதார தாக்கங்களைக் குறைத்து, நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தக் கடன் தொகையானது கொள்கை சார்ந்த கடன் வசதியாக (policy-based loan) இலங்கைக்குக் கிடைக்கவுள்ளதுடன், நாட்டின் வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இது பயன்படுத்தப்படவுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதும் இந்த நிதியுதவியின் முக்கிய நோக்கமாகும் என ஆசிய அபிவிருத்தி வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர், மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியம் முழுவதும் கடுமையான பொருளாதார நிச்சயமற்ற தன்மை உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடி காரணமாக இலங்கையில் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், புதிய முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றிற்குத் தடைகள் ஏற்படுவதற்கு இடம் அளிக்கக் கூடாது என்றும், இந்தக் கடன் தொகை அதற்குப் பெரிய பலமாக அமையும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த நிதியுதவியின் கீழ் இலங்கைக்கு மேலும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் கூடுதல் நிதி வசதியும் கிடைக்கவுள்ளதுடன், இதன் மூலம் மத்திய கிழக்கு நெருக்கடியினால் ஏற்படும் தாக்கங்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் திறன் இலங்கைக்குக் கிடைக்கும்.

வர்த்தக அமைப்புகளை நவீனமயமாக்கல், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளை மேலும் போட்டித்தன்மை கொண்ட நிலைக்குக் கொண்டு வருதல் மற்றும் பொருளாதார மண்டலங்களுக்கு முதலீடுகளை ஈர்த்தல் ஆகியவற்றுக்காகச் செயல்படுத்தப்படும் சீர்திருத்தங்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் என்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி வலியுறுத்தியுள்ளது.

Recent Articles

Back to top button