கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் தலையை மூடிய இஸ்லாமிய ஆடையுடன் கடமையேற்கச் சென்ற முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களுக்கு கடமை செய்ய அனுமதி மறுக்கப்பட்டது வேதனையாக உள்ளது ; மு. கா செயலாளர் நிசாம் காரியப்பர்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பர்தா அணிந்து கடமையேற்கச் சென்ற முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், இன ரீதியான பதற்றங்களை மீண்டும் உருவாக்கும் வகையிலான தனிநபர்களின் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் தலையை மூடிய ஆடையுடன் கடமையேற்கச் சென்ற புதிய முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களுக்கு, ஆடை விதிமுறையை மீறியதாகக் கூறி கடமையைப் பொறுப்பேற்க அனுமதி மறுக்கப்பட்டமை வேதனைக்குரியது எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் பேசும் மக்களிடையேயும், இறுதியில் அனைத்து இலங்கையர்களிடையேயும் இனப் பிரிவுகளைக் கடந்து ஒற்றுமையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், இவ்வாறான சம்பவங்கள் கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக மக்களால் நிராகரிக்கப்பட்ட இனப் பதற்றங்களை மீண்டும் உருவாக்கும் வகையில் தனிநபர்களின் செயற்பாடுகள் அமைய ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது எனவும் நிசாம் காரியப்பர் வலியுறுத்தியுள்ளார்.



