பெண் அரச உத்தியோகத்தர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு – அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்வை 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் மேயர் சக்கி அதாஉல்லாவை, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு – அக்கரைப்பற்று நீதவான் நீதின்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
✍🏻 மப்ரூக் UL
கடந்த 19ஆம் திகதி – அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை செப்டம்பர் 01ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதாவன் உத்தரவிட்டார்.
இந்த நிலையிலேயே – அவரை தொடர்ந்தும் இம்மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் இன்று உத்தரவிட்டார்.
🔴வழக்கின் பின்னணி
அக்கரைப்பற்று மாநகர சபையில் பணியாற்றிய அரச பெண் உத்தியோகத்தர் ஒருவரைத் திருமணம் முடிப்பதாக – ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், சக்கி அதாஉல்லா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வராக சக்கி அதாவுல்லாஹ் பதவி வகித்த போது, அங்கு கடமையாற்றிய அக்கரைப்பற்று – பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த அரச உத்தியோகத்தரான பெண் ஒருவரைத் திருமணம் முடிப்பதாக வாக்குறுதியளித்து, அவரைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக, குறித்த பெண் பேஸ்புக் நேரலை ஊடாக கூறியிருந்தார்.
இதனையடுத்து, அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவினால் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான சக்கி அதாவுல்லாஹ், வாக்குமூலம் வழங்குவதற்காகப் பணியகத்திற்கு வருகை தந்திருந்த போது கைதானார்.
பின்னர், அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினர், கடந்த மாதம் 18ஆம் திகதியன்று அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.
அதன்போது அவரை ஓகஸ்ட் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
பின்னர் ஓகஸ்ட் 19 அன்று சந்தேக நபர் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரின் விளக்கமறியல் செப்டம்பர் 01 வரை நீடிக்கப்பட்டது.
தற்போது சக்கி அதாஉல்லா சுகயீனமுற்ற நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதால், அவர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவில்லை.
இந்த நிலையிலேயே, அவரை செப்டம்பர் 09 வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
#zackieathaullah #Akkaraipattu #remand #magistratecourt #Mayor #ulmabrook



