நாங்கள் கேட்டவுடனே அர்ஜுன் மஹேந்திரனை சிங்கப்பூர் ஒப்படைக்காது – நலிந்த
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வருவதற்கு அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், எனினும் இலங்கை கோரிய உடனேயே சந்தேகநபர்களை ஒப்படைக்க சிங்கப்பூர் போன்ற நாடுகள் கடமைப்பட்டிருக்கவில்லை என்றும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்காக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
தேர்தல் காலத்தில் அர்ஜுன் மஹேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு முடியாமல் போயுள்ளதா என இதன்போது கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர், எந்தவொரு குற்றவாளியையும் நாட்டிற்கு அழைத்து வரும்போது சம்பந்தப்பட்ட நாடுகளில் நடைமுறையிலுள்ள சட்ட அமைப்புகள் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.
“நாங்கள் கேட்டவுடனேயே எந்தவொரு நாடும் சந்தேகநபர்களை ஒப்படைக்காது. அதற்கு நீண்ட இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அனைத்து குற்றவாளிகளையும் நாட்டிற்கு கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்துவதே எங்களது எதிர்பார்ப்பாகும்” என்றும் அவர் தெரிவித்தார்.
அர்ஜுன் மஹேந்திரன் தொடர்பிலும் அந்த செயல்முறை தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனை வெற்றிகரமாக முடிப்பற்கு தேவையான தலையீடுகளை அதிகபட்சமாக மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



