இந்தத் துர்ப்பாக்கியமான ஆட்சியை நாம் தோற்கடிக்க வேண்டும்… அத்துடன் இந்த நாட்டிற்கான ஒரே மாற்றுத் தரப்பாக எமது ஐக்கிய மக்கள் சக்தியே காணப்படுகிறது

22 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் வெளிப்படும் அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கிலான அதிகார மோகத்தை நாம் தோற்கடிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
22 ஆம் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சத்தி கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையம் முன்பாக இன்று (03) நடத்திய அமைதி வழியிலான கண்டனப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அதிகார மோகத்தை முறியடித்து, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை வீழ்த்தி, உயரிய நீதிமன்றத்தைப் பாதுகாத்து நிலைநிறுத்தவே ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் இவ்வாறு வீதிக்கு இறங்கியுள்ளோம்.
22 ஆவது திருத்தத்தின் ஊடாக அதிகார மோகத்துடன் செயற்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டின் ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும், நீதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளையும் செய்து நீதித்துறையை சீரழித்து நாசப்படுத்தும் வேலைகளை செய்து வருகின்றது. நாட்டிற்கான ஒரே மாற்றுத் தரப்பாக காணப்படும் ஐக்கிய மக்கள் சக்தி இந்த மோசமான 22 ஆவது திருத்தத்தை ஜனநாயக முறையில் தோற்கடிப்பதற்கு நேற்றும் இன்றும் நாளையும் தேவையான அனைத்தையும் செய்யும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தற்போது வறுமை அதிகரித்து, பொருட்களின் விலைகளும் கூடி, வேலையின்மையும் அதிகரித்து காணப்படுகின்றன. ‘200 ஆடைத் தொழிற்சாலைகள்’ திட்டமும் செயலிழந்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டு வருகின்றன. வறுமையை ஒழிப்பதற்கு அரசாங்கத்திடம் எந்தத் தீர்வும் இல்லை. நாட்டில் சர்வாதிகார ஆட்சியைக் ஸ்தாபிப்பதே அரசாங்கத்திற்குத் தேவையான ஒன்றாக காணப்படுகின்றது. தனிக் கட்சி மாத்திரம் அதிகாரத்தைக் கைப்பற்ற இந்த அதிகார மோகத்துடன் கொண்டுவரப்பட்ட 22 ஆவது திருத்தத்தை நாம் தோற்கடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் காணப்படுவதனால் வெற்றிபெறலாம் என்று இந்த அரசாங்கம் கருதுகின்றது. வலுச்சக்தி அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தி தோல்வியடைந்தாலும், இறுதியில் அமைச்சருக்கும் செயலாளருக்கும் வீட்டிற்குச் செல்ல நேர்ந்தது போன்றே இந்தத் துர்ப்பாக்கியமான ஆட்சியையும் ஒருநாள் நாம் தோற்கடிப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாம் எப்போதுமே சரியான நிலைப்பாட்டிலும் சரியான இடத்திலுமே இருந்தோம்.
இலங்கை நீதித்துறை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியான நாம் எப்போதுமே சரியான நிலைப்பாட்டிலும் சரியான இடத்திலுமே இருந்தோம். கனம் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவின் பிரச்சினை முதல் கடந்த அரசாங்கம் நீதிபதிகளைப் வரப்பிரசாதக் குழுவிற்கு அழைத்துச் செல்ல முற்பட்டதை எதிர்த்தது வரை ஐக்கிய மக்கள் சக்தியே குரல் கொடுத்தது. ஐக்கிய மக்கள் சக்தியே சரியான நிலைப்பாட்டிலும் இருந்தது. 17, 18, 19, 20 மற்றும் 21 ஆம் திருத்தங்களுக்கு கைகளை உயர்த்தியவர்கள் யாரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை என்றும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி விவசாயியின் மகனாக இருந்தால், நெல்லுக்கான சாதாரண நிலையான விலையை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
ஜனாதிபதி விவசாயியின் மகனாக இருந்தால், நெல்லுக்கான சாதாரண நிலையான விலையை பெற்றுக்கொடுத்து, பொருட்களின் விலையைக் குறைத்து, மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த தனிக் கட்சிக் அரசியலை நாம் தோற்கடிக்க வேண்டும்.
அண்மையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளை வழங்கி வைத்தனர். ஆனால் மறுபுறம் இந்த அரசாங்கம் கோதுமை மாவின் விலையைக் கூட அதிகரித்து மக்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது. இந்த தனிக் கட்சிக் அரசியலை நாம் தோற்கடிக்க வேண்டும் என்றும் அவர் இங்கு மேலும் தெரிவித்தார்



