நாமல் ராஜபக்ஷ ஏன் கைது?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, லஞ்ச ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்காக (wide-body) விமானங்களை கொள்முதல் செய்வது தொடர்பான பரிவர்த்தனை ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் லஞ்ச சம்பவம் குறித்து நடைபெற்று வரும் விசாரணைகளுடன் தொடர்புடையே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக மாற்றுத் திகதியைப் பெற்றுத் தருமாறு அவர் விடுத்த கோரிக்கையை ஆணைக்குழு நிராகரித்ததை அடுத்து, நாமல் ராஜபக்ஷ இன்று லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானார்.
செப்டம்பர் 4 ஆம் திகதி ஆஜராகுமாறு ஆணைக்குழு ஆரம்பத்தில் அவருக்கு அறிவுறுத்தியிருந்த போதிலும், அதற்குப் பதிலாக செப்டம்பர் 3 ஆம் திகதி ஆஜராக முடியுமா என்று நாமல் ராஜபக்ஷ வினவியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், திட்டமிட்டபடி செப்டம்பர் 4 ஆம் திகதியே ஆணைக்குழுவின் முன் ஆஜராக வேண்டும் என லஞ்ச ஊழல் ஆணைக்குழு அவருக்கு அறிவித்திருந்தது.
குறிப்பிட்ட திகதியில் ஆஜராகத் தவறினால் சட்டத்திற்கு அமைவாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணைக்குழு அவருக்கு அறிவித்திருந்தது.



