உச்சநீதிமன்றத் தீர்ப்பு கிடைத்தவுடனே 22 ம் திருத்தத்தினை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவோம்.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு கிடைத்தவுடனே, அதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க புளத்சிங்களவில் தெரிவித்தார்.
ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்கி, ‘கருப்பு அரசாங்கத்தை’ (நிழல் ஆட்சியை) தகர்த்தெறிவோம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
“எமது அரசாங்கம் – இரண்டு ஆண்டுகள் நாட்டிற்குச் சுபிட்சம்” என்ற கருப்பொருளில் புளத்சிங்களவில் நேற்று (06) நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் எக்காரணம் கொண்டும் திரும்பப் பெறப்படமாட்டாது என்றும் அவர் அங்கு தெரிவித்தார்.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான தீர்ப்பு விரைவில் கிடைக்கும் என ஊடகச் செய்திகள் வெளியாகியிருந்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அத்தீர்ப்பு கிடைத்த பின்னர் பாராளுமன்றத்தில் அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
“நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் இந்த முடிவுகளை மக்கள் நலனுக்காகவே எடுக்கிறோம். எடுக்கும் எந்தவொரு முடிவையும் நாங்கள் பின்வாங்க மாட்டோம்” என்றும் ஜனாதிபதி அங்கு வலியுறுத்தினார்.



