நீதிமிக்க அரசர்கள் ஆண்ட இலங்கை போன்ற நாட்டில் அதர்மமான செயல்கள் நடப்பது மிகவும் விசனத்திற்குரியது… – பேராயர்
படகு மூலம் நாட்டிற்குள் போதைப்பொருட்களைக் கடத்தும் கடத்தல் நடவடிக்கைகளில் எந்தவிதத்திலும் ஈடுபட வேண்டாம் என்று கொழும்பு பேராயர் அதிவணக்கத்திற்குரிய மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கடற்றொழிலாளர்களிடம் விசேட கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
பேருவலை, பண்டாரவத்தை புனித லாசரஸ் தேவாலயத்தின் 150 ஆவது ஜூபிலி பெருவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பேராயர், தற்போதைய சமூகத்தில் மத மற்றும் கலாச்சார விழுமியங்களை நிராகரிக்கும் போக்கு உருவெடுத்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, இளைய தலைமுறையினர் மதக் கோட்பாடுகள் தேவையில்லை என்று சிந்திப்பதன் காரணமாக, நாட்டின் பழங்காலம் தொட்டே நிலவி வரும் பௌத்த தத்துவம் உள்ளிட்ட அனைத்து மத விழுமியங்களுக்கும் இன்று பெரும் சவால் ஏற்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் எதிர்கால சந்ததியை அழிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்து தனது கவலையைத் தெரிவித்த அவர், நாட்டிற்குள் வரும் போதைப்பொருட்களில் பெரும்பாலானவை கடல் வழியே படகுகள் மூலம் கொண்டு வரப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
“நமது இளைய தலைமுறை இந்தப் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி அழிந்து போகிறது. பாதாள உலகக் குழுக்களின் கொடூரமான நடவடிக்கைகள் இன்று ஒரு சமூகப் பேரழிவாக மாறியுள்ளன. சில பணக்காரர்களும் செல்வாக்கு மிக்க நபர்களும், பாதாள உலகத் தலைவர்களும் இதனை ஒரு வியாபாரமாகச் செய்து வருகின்றனர். எனவே, இந்தப் பேரழிவை ஏற்படுத்தும் போதைப்பொருட்களைக் கொண்டு வருவதற்கு உங்களது படகுகளை வழங்க வேண்டாம் என்று நான் மீனவ மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.
நீதிமிக்க கொள்கைகளின் அடிப்படையில் ஆட்சி செய்த அரசர்களின் வரலாற்றைக் கொண்ட இலங்கை போன்ற ஒரு நாட்டில், இதுபோன்ற அதர்மமான செயல்கள் நடப்பது மிகவும் விசனத்திற்குரிய ஒரு நிலைமை என்றும் பேராயர் மேலும் தெரிவித்தார்.



