ஜனாதிபதியின் பிரபல்யம் தற்போது 75% ஐத் தாண்டியுள்ளது: அமைச்சர் வசந்த சமரசிங்க
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது இருந்த 48% வாக்கு சதவீதம், தற்போது நாட்டின் மக்களிடையே 75% க்கும் அதிகமான உயர்ந்த ஆதரவாகவும் நம்பிக்கையாகவும் மாறியுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது நாட்டின் விவசாய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, விவசாயத் துறையை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் எடுத்துள்ள மற்றும் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் தெளிவுபடுத்தினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் கூறியதாவது:
“சகோதரர் அனுர திசாநாயக்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற போது 48% வாக்கு மட்டுமே இருந்தது. ஆனால் தற்போதைய ஆட்சியின் மீதான நம்பிக்கையின் காரணமாக, இன்று நாட்டின் மக்கள் தொகையில் 75% க்கும் அதிகமானோர் அவரது தலைமையை ஏற்றுக்கொண்டு ஆசீர்வதிக்கின்றனர். பொதுவாக இந்நாட்டில் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களின் பிரபல்யம் ஒரு சில வருடங்களில் சரிந்துவிடும். ஆனால்,
மக்கள் தலைவரான சகோதரர் அனுர குமார திசாநாயக்க நாளுக்கு நாள் மக்களின் நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு நாட்டை முன்னோக்கி நல்வழிப்படுத்தி வருகிறார்.குறிப்பாக, வரவிருக்கும் விவசாயப் பருவத்திற்குத் தேவையான வசதிகளை விவசாயிகளுக்கு முன்கூட்டியே வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மத்திய கிழக்கு போர்ச் சூழலால் உலகச் சந்தையில் உரங்களின் விலை உயர்ந்த போதிலும், விவசாய சேவை மையங்கள் மூலம் திறந்த சந்தையை விட 6,000 – 7,000 ரூபாய் குறைவான விலையில் உரை மூட்டை ஒன்றை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுத்தோம். அதற்கு ஆகும் கூடுதல் செலவை அரசாங்கமே ஏற்றுக்கொண்டது.
இது தவிர, கால்வாய்கள், குளங்களை புனரமைத்தல் மற்றும் களஞ்சியப் படுத்தும் வசதிகளைச் சீரமைக்கும் பணிகளும் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. நெல் சந்தைப்படுத்தல் சபை மூலமாகவும், தனியார் மற்றும் சிறு, நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு வட்டி இல்லாத கடன் வசதிகளை வழங்கியும் விவசாயிகளின் விளைச்சலுக்கு நியாயமான விலையை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன.மேலும், வடக்கின் சிவப்பு வெங்காயம், தம்புள்ளை, அனுராதபுரம், மாத்தளை மற்றும் பொலன்னறுவை பகுதிகளில் பி-வெங்காயம் (B-onion), பதுளை மற்றும் பண்டாரவளை விவசாயிகளின் உருளைக்கிழங்கு அறுவடைகளைக் கொள்முதல் செய்தல் மற்றும் சோளத்திற்கு நிலையான விலையை நிர்ணயித்தல் உட்பட விவசாய மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் உண்மையான மக்கள் அரசாங்கமாக நாங்கள் இந்நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்போம்.”என்றார்.



