தரமற்ற 190,000 புற்றுநோய் மருந்துகளை இறக்குமதி செய்த NMRA தலைவரை உடனடியாக பதவி நீக்கம் செய்யக் கோரிக்கை…
முறையான தரக் கட்டுப்பாட்டு லேபிள் அல்லது அனுமதி இன்றி 250 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 190,000 புற்றுநோய் மருந்து மாத்திரைகளை/ஊசிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்து, நோயாளிகளின் உயிரை ஆபத்தில் தள்ளிய தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் (NMRA) தலைவர் விசேட வைத்தி நிபுணர் ஆனந்த விஜயவிக்ரம மற்றும் அரசு மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளை உடனடியாக பதவிகளிலிருந்து நீக்கி, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவர்கள் மற்றும் மனித உரிமைகளுக்கான மருத்துவ சங்கக் கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த அமைப்பின் தலைவர் விசேட வைத்தி நிபுணர் சமல் சஞ்சீவ இதனை வெளிப்படுத்தினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது:
“சிறுவர் புற்றுநோயாளிகள் உட்பட அனைத்துப் புற்றுநோயாளிகளுக்கும் கதிரியக்க சிகிச்சைக்குப் பிறகு நோய் எதிர்ப்புச் செயல்பாட்டை விரைவுபடுத்துவதற்காக வழங்கப்படும் ‘G-CSF’ (G CSF Injection) என்ற அத்தியாவசிய மருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பின்னர், அதில் உரிய தரப்படுத்தப்பட்ட லேபிள் இல்லை எனக் கூறி இதுவரை பயன்படுத்தப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஊசித் தொகுதி சிக்கலானது என்றால், 250 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள அந்த 190,000 மருந்து டோஸ்களை சுங்கப் பிரிவில் இருந்து விடுவிக்க அனுமதி அளித்தது யார் என்பதை தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் தலைவர் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். மேலும், மருந்து ஒழுங்குமுறை அதிகார சபை இது தொடர்பான தகவல்களை மறைப்பது ஏன் என்றும் நாங்கள் கேள்வி எழுப்புகிறோம்.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு மருந்தும் சுங்கப் பிரிவிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்னர், அதற்குரிய ஆய்வு அறிக்கைகள், ஆய்வக பகுப்பாய்வு அறிக்கைகள் மற்றும் அனுமதிப் பத்திரங்களை வெளியிடும் முழு அதிகாரமும் மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையிடமே உள்ளது. ஒரு மருந்தின் பதிவுச் சான்றிதழ், தரச் சான்றிதழ், பகுப்பாய்வு அறிக்கைகள், இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமங்கள், விலை சான்றிதழ்கள் மற்றும் லேபிள் மற்றும் பேக்கேஜிங் சான்றிதழ்கள் ஆகியவை NMRA அனுமதியின்றி வெளியிட முடியாத சட்டப்பூர்வ வழிமுறை உள்ள பின்னணியில், இத்தகைய தரமற்ற மருந்துத் தொகுதி இலங்கைக்கு வந்தடைந்ததன் பொறுப்பில் இருந்து மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையோ அல்லது அதை இறக்குமதி செய்த அரசு மருந்துக் கூட்டுத்தாபனமோ எந்த வகையிலும் தப்ப முடியாது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பொறுப்பு வாய்ந்த அரசு அதிகாரிகள் இதுவரை ஒளிந்துகொண்டு புற்றுநோயாளிகளின் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.”
பொறுப்பான அமைச்சர்களும் இந்த பாரிய ஊழல் குறித்து மௌனம் காப்பதாகவும், இதன் விளைவாக தற்போது புற்றுநோயாளிகளுக்கு உரிய அளவில் தொடர்ச்சியாக மருந்துகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுவதாகவும் அவர் கூறினார். மருத்துவமனை அமைப்பில் நிலவும் புற்றுநோய் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் தட்டுப்பாடு காரணமாக, தனியார் மருந்தகங்களில் அம்மாத்திரைகளின் விலைகள் வேகமாக உயர்ந்துள்ளதாகவும், சில சந்தர்ப்பங்களில் சரியாகப் பதிவு செய்யப்படாத மருந்துகள் கூட சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.
சுகாதாரத் துறை எதிர்கொண்டுள்ள மனிதவள நெருக்கடி குறித்து விளக்கிய டாக்டர் சமல் சஞ்சீவ, தற்போது நிலவும் மருத்துவர்கள் மற்றும் விசேட மருத்துவர்களின் தட்டுப்பாடு முழு சுகாதார அமைப்பிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டினார். நிலவும் வரித் கொள்கைகள் மற்றும் சம்பள முரண்பாடுகள் காரணமாக புதிய மருத்துவர்கள் அரசு சேவையில் இணைய தயக்கம் காட்டுவதால், இளம் மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போக்கு மேலும் அதிகரித்து வருகிறது.
குறைந்தபட்சம் நாட்டின் சுகாதார சேவையை முறையாகப் பேணுவதற்கு 5,000 விசேட மருத்துவர்கள் மற்றும் 30,000 பொது மருத்துவர்களின் தீவிர சேவை தேவைப்பட்ட போதிலும், காலியாக உள்ள இடங்களுக்குத் தேவையான ஊழியர்களை அங்கீகரிப்பதை திறைசேரி தொடர்ந்து தாமதப்படுத்துவது பல தீவிரமான நெருக்கடிகளுக்கு வழிவகுத்துள்ளதாக விசேட வைத்தி நிபுணர் சமல் சஞ்சீவ மேலும் தெரிவித்தார்.



